உலகை திரும்பி பார்க்க வைத்துள்ள அக்னி- 5 ஏவுகணை சோதனை… சில முக்கிய அம்சங்கள்!

இந்தியா நேற்று அக்னி 5 திவ்யாஸ்திரா சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டதாக அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த அதிநவீன தொழில்நுட்பம் உள்ள நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதை அடுத்து, இத்திட்டம் வெற்றி அடைந்ததன் மூலம் நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமையளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மிஷன் திவ்யஸ்திரா திட்டத்திற்காக பணியாற்றிய நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (DRDO) விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

எம்ஐஆர்வி ( Multiple Independently Targetable Re-entry Vehicle – MIRV) தொழில்நுட்பம் மூலம் செயல்படும் இந்த ஏவுகணையில் இருந்து ஆயுதங்களைப் பல திசைகளில் பல வேகத்தில் போட முடியும் என்பதே இதன் சிறப்பாகும். நாடு ஏற்கனவே அக்னி 1 முதல் 4 ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது. இவை 700 கி.மீ முதல் 3,500 கி.மீ தொலைவு வரை சென்று தக்கவல்லவை.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 அணு ஏவுகணைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

1. அக்னி 5 ஏவுகணை நான்கு முதல் ஆறு அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதிலும், ஒவ்வொன்றும் தனித்தனி இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நாடுகளிடம் MIRV திறன் உள்ளது.

2. அக்னி-5 ஏவுகணைகள் 5,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை, மேலும் இது சீனாவின் வடக்குப் பகுதி மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் உட்பட கிட்டத்தட்ட ஆசியா முழுவதையும் தாக்கும் எல்லைக்குள் கொண்டு வர முடியும். இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பெரிதும் மேம்படுத்தும்

3. இந்தியா ஏற்கனவே அக்னி 5 ஏவுகணை தொடர்பான பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் MIRV தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுகணை சோதனை இதுவாகும்.

4. இந்த அமைப்பில் உள்நாட்டு ஏவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் உயர் துல்லிய சென்சார் தொகுப்புகள் உள்ளன. அவை துல்லியத்துடன் இலக்கு புள்ளிகளை அடைவதை உறுதி செய்கின்றன.

5. மிஷன் திவ்யஸ்திரா திட்டத்தில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்துள்ளனர் என்றும், இந்த திட்டத்திற்கு ஒரு பெண் தலைமை இயக்குநராக உள்ளார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் இது வரை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி ஏவுகணைகள்

அக்னி – 1

டிஆர்டிஓவால் 1983 ஆம் ஆண்டு ஏவப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணையான அக்னி – 1, அக்னி வகை ஏவுகணைகளில் முதன்மையானது. 1,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது 700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை படைத்தது.

அக்னி – 2

1999 ஆம் ஆண்டுபரிசோதிக்கப்பட்ட அக்னி-2 ஒரு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது 1,000 கிலோ எடையை சுமந்து செல்லும். 20 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 2,000 முதல் 2,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இரண்டு நிலைகளை கொண்ட இந்த ஏவுகணையில் மேம்பட்ட உயர் துல்லியமான வழிசெலுத்தல் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

அக்னி – 3

அக்னி – 3 என்பது ஒரு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் 3,500 கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்க கூடியது இரண்டு நிலைகளை கொண்ட இந்த ஏவுகணை 1,500 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது. இந்த ஏவுகணை 2011 ஆம் ஆண்டு ஆயுதப்படையில் இணைக்கப்பட்டது.

அக்னி – 4

4,000 கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி-4 20 மீட்டர் நீளம் கொண்டது. இந்த ஏவுகணை 1,000 கிலோ எடையை சுமந்து செல்லும். சாலை – மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவக்கூடியது. 2012 ஆம் ஆண்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஏவுகணை சோதனையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாக்கிஸ்தான் 2.750 கிமீ தொலைவு வரை சென்று தாக்கும், ஷாஹீன் III ஏவுகணையைப் பயன்படுத்தி எம்ஐஆர்வி தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்தது, ஆனால், இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக டிஆர்டிஓ உயர்மட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *