பொங்கலை முன்னிட்டு மண்பானைகள், அடுப்புகள் விற்பனை விறுவிறுப்பு @ பாளையங்கோட்டை
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பொங்கலை முன்னிட்டு மண்பானைகள், அடுப்புகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் பல்வேறு இடங்களில் பொங்கலுக்கான பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோயில் அருகே பொங்கலிடுவதற்கு பயன்படுத்தும் அடுப்புகள் , பொங்கல் பானைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இவற்றை விற்பனை செய்யும் கான்சாபுரம் இசக்கியம்மாள் கூறியதாவது:
3 அடுப்பு கட்டிகள் ரூ.180, தனி அடுப்பு ரூ. 160, சிறிய ரக அடுப்புகள் ரூ. 100 -க்கு விற்பனை செய்கிறோம். பொங்கலிடுவதற்கான பானைகள் அளவை பொருத்து ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மண்பாண்டங்களை தயார் செய்ய மண் கிடைப்பதில் இந்தமுறை சிரமம் இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் வெள்ள நீர் வந்து தயாரித்து வைத்திருந்த அடுப்புகள் பலவும் சேதமடைந்தன. எங்களுக்கு மட்டும் ஆயிரம் அடுப்புகள் வீணாகிவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்காக புரட்டாசி மாதம் முதல் மண்பானைகள், அடுப்புகளை நாங்கள் தயார் செய்து விடுவோம். அப்படித்தான் இந்த முறையும் தயார் செய்திருந்தோம். ஆனால் மழையால் சேதமடைந்துவிட்டன. சேதங்களை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து சென்றிருந்தனர்.
ஆனால் நிவாரணம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற காரங்களால் இவ்வாண்டு மண்பாண்ட பொருட்களுக்கு 10 சதவீதம் வரை அதிக விலை நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது என்றார்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர், கான்சாபுரம் மற்றும் பாளையங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்தவ பலரும் பொங்கலுக்கான மண்பாண்டங்களை பாளையங்கோட்டையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்கிறார்கள்