AI தொழில்நுட்பம் வருமான வரி தாக்கலை சரிபார்க்க உதவுகிறது: மத்திய நேரடி வரி வாரிய தலைவர் தகவல்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையிலான மதிப்பீட்டில் வரி செலுத்துவோர் தாக்கல் செய்த ஆண்டு வருமானம் மற்றும் அவர்களின் நிதி பரிவர்த்தனைகளுக்கு இடையே உள்ள பொருத்தமின்மையைக் கண்டறிய முடியும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார்.

கண்டறியப்பட்ட தகவல்கள் அடிப்படையில் டிசம்பர் மாதத்தில் சுமார் 44 லட்சம் பேருக்கு நேரடி வரிகள் வாரியம் மின்னஞ்சல்களை அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், வரி ஏய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் பெரிய அளவில் தவிர்க்கப்படுகிறது என்றும் வரி செலுத்துவோர் உண்மையான வருவாய் விவரங்களைச் சமர்ப்பிக்கும் வழக்கத்தை அதிகரிக்க உதவியுள்ளது என்றும் நிதின் குப்தா கூறியிருக்கிறார்.

“புதிய தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தாக்கல் செய்யப்பட்ட வருமானக் கணக்கு மற்றும் நிதி பரிவர்த்தனைகள் இடையே ஒருவித பொருத்தமின்மை காணப்பட்டதை வைத்து, டிசம்பர் மாதத்தில் சுமார் 44 லட்சம் பேருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பினோம். நாங்கள் இதைக் கண்டுபிடித்துள்ளோம் என்று வரி செலுத்துவோரிடம் தெரிவித்து, வருமானத்தை சரியாகக் குறிப்பிட்டிருக்கிறீர்களா என்று சரிபார்க்குமாறு அறிவறுத்தினோம்” என்று குப்தா தெரிவிக்கிறார்.

2009-10 நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.25,000 வரையிலும், 2010-11 முதல் 2014-15 வரையிலான நிதியாண்டுகளுக்கு ரூ.10,000 வரையிலும் நிலுவையில் உள்ள நேரடி வரியைத் தள்ளுபடி செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. தேர்தலுக்குப் பிறகு ஜூலையில் சமர்ப்பிக்கப்படும் முழு பட்ஜெட்டின்போது இது குறித்து ஏதேனும் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலமா என்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *