அதிமுக கொடி, சின்னம் அதிமுகவுக்கே சொந்தமல்ல.. ஓபிஎஸ் வக்கீல் பகீர் வாதம்! அதிர்ந்துபோன இபிஎஸ் தரப்பு
சென்னை: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது தொடர்பான வழக்கில், இன்று ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்த வாதம் குறித்து இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அவற்றை பயன்படுத்துவதற்கு ஒபிஎஸ் அணியினருக்குத் தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர் செல்வம் தரப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தீர்ப்பு: அந்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சு தீர்ப்பு அளித்தது. அதில் அதிமுகவின் கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனி நீதிபதியிடம் உள்ள பிரதான வழக்கில், இதுகுறித்து முறையிட்டுக் கொள்ள ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “அதிமுக கொடி, சின்னம், அலுவலக முகவரியையும் பயன்படுத்தத் தடை கோரி ஓபிஎஸ் வழக்கைத் தாக்கல் செய்தார். முதலில் இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்தத் தனி நீதிபதி தடை விதித்தார். இந்த தடையை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்திருந்தார்.
சொந்தமில்லையாம்: இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர்கள் அதிமுகவின் கொடி அதிமுகவுக்குச் சொந்தமல்ல என்ற வினோத வாதத்தை முன்வைத்தனர். மேலும், அதிமுக அலுவலகம் டிரஸ்ட் பெயரில் இருப்பதாகப் புதிதாக வாதத்தை முன்வைத்தனர். ஆனால், இதை ஏற்க முடியாது. இது தவறு.
அதிமுக அலுவலகத்தை அதிமுகவின் ரெஜிஸ்டர்ட் ஆபீசாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக கொடி என்பது அதிமுக சட்ட விதிகளில் இருக்கிறது. அப்படியிருக்கும் போது அதிமுக கொடி அதிமுகவுக்கே சொந்தமில்லை என்பது ஏற்கத்தக்கது இல்லை. இதை அவர் எப்படி வாதமாகச் சொல்ல முடியும். அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்துவதால் தேவையில்லாத குழப்பங்கள் வருகிறது.