இப்படி ஒரு ஆற்றல்மிகு உடன்பிறப்பை அதிமுக கைவிட்டதே.. இவரை பாஜக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.. பூங்குன்றன்..!

சென்னை 198வது வார்டினுடைய கவுன்சிலர் லியோ N சுந்தரத்தின் பணிகளை பார்த்து பார்த்து என் நெஞ்சம் ஆனந்த கண்ணீர் வடிக்கிறது. இப்படி ஒரு ஆற்றல்மிகு உடன்பிறப்பை கழகம் கைவிட்டதே என பூங்குன்றன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- தலைமை பிடிக்காமல் சிலர் கட்சியை விட்டு பிரிந்து போவார்கள். மாவட்டத்தை பிடிக்காத சிலர் கட்சியை விட்டு பிரிந்து செல்வார்கள். பலர் இரட்டை இலையை மறக்கமுடியாமல் வேறுவழியின்றி நிர்வாகிகளால் ஒதுக்கப்பட்டதன் காரணமாக வேதனையோடு விலகிச் செல்வார்கள். பதவி கிடைக்காத கோபத்தில் சிலர் பிரிந்து செல்வார்கள். உழைக்காதவருக்கு பதவி கிடைக்காமல் நடிப்பவர்க்கு பதவி கிடைத்துவிட்டதே என்ற மனவருத்தத்தோடு சிலர் விலகிச் செல்வார்கள்.

இப்படி பிரிந்து போனவர்கள் பலர். அதை யாரும் பெரிதாகவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் சிலரை, ஏன் இந்தக் கட்சி கைவிட்டது? ஏன் இவர்கள் பிரிந்து போனார்கள்? என்ற கேள்விகள் எல்லோரும் மனதிலும் எழாமல் இருக்காது. அத்தகைய ஒருவர்தான் சென்னை 198 வது வார்டினுடைய கவுன்சிலர் லியோ N சுந்தரம் அவர்கள்.

புரட்சித்தலைவரையும், புரட்சித்தலைவியையும் தெய்வமாக வணங்கி, இரட்டை இலையை நெஞ்சில் சுமந்து, கட்சிக்காக பாடுபட்ட நல்லவர், ஆன்மீக வள்ளல் லியோ N சுந்தரம் அவர்கள் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மக்கள் தொண்டாற்றி வருகிறார்கள். முகநூலில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர் தொடர்ந்து மக்களுக்கு உதவியும், ஆன்மீக நற்பணிகளும் செய்து வருகிறார் என்றால், அடித்து சொல்லலாம் அது ஐயா லியோ N சுந்தரம் அவர்கள் என்று! முகநூலில் அவரது பணிகளை பார்த்து பார்த்து என் நெஞ்சம் ஆனந்த கண்ணீர் வடிக்கிறது. இப்படி ஒரு ஆற்றல்மிகு உடன்பிறப்பை கழகம் கைவிட்டதே.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள், லியோ N சுந்தரம் போன்றவர்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கினார்கள். நல்லவர்களை இந்த மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் நன்றி மறவாத வார்டு மக்கள் இவரை இதயத்தில் வைத்து வெற்றி பெறச் செய்து கொண்டிருக்கிறார்கள். மனப்பூர்வமாக மக்கள் பணியாற்றும் என் பாசத்திற்குரிய, அன்பிற்கினிய லியோ N சுந்தரம் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி உயர்வைக் கொடுத்து, பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை என பூங்குன்றன் கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *