AIADMK: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னென்ன?
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மஹாலில் இன்று காலை (டிச.26) நடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், உள்பட 2000-க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனா்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றி பெற்றதற்கு நன்றி, வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும், மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியதோடு, எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம், மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம், பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றும் திமுக அரசுக்கு கண்டனம், சட்டம்-ஒழுங்கு சீரழிவிற்கும், திமுகவின் மக்கள் விரோதப் போக்கிற்கும் கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்துக்கு கண்டனம், நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரவை வலியுறுத்தி தீர்மானம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும், எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும், தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பெரும்பாலானவை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.