180 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஏர் இந்தியா நிறுவனம்.. காரணம் என்ன?
இந்தியாவின் பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா 180 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. மொத்த ஊழியர்களில் 1%க்கும் குறைவானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாவை கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரியில் டாடா குழுமம் கைப்பற்றியது.டாடா நிறுவனம் உருவாக்கிய ஏர் இந்தியா, அரசு வசம் சென்று மீண்டும் டாடாவிடமே வந்து சேர்ந்தது. . டாடா குழுமம் விமான நிறுவனத்தை வாங்கியபோது, ஏர் இந்தியாவில் 18,500 ஊழியர்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் 6,200 க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வந்தனர். தற்போது இவர்களில் 180 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏர் இந்தியாவை கைப்பற்றிய உடன் பல்வேறு நிர்வாக சீர்த்திருத்தங்களை ஏர் இந்தியா கொண்டு வந்தது. குறிப்பாக துடிப்பான ஊழியர்களை பணி அமர்த்த நடவடிக்கை எடுத்தது. இதற்காக 2 விருப்பங்களை ஊழியர்களுக்கு வழங்கியது. முதலாவது விருப்ப ஓய்வு, மற்றொன்று திறன்களை மேம்படுத்திக்கொண்டு பணியில் தொடருதல்.
முதலாவது வாய்ப்பில் கணிசமான ஊழியர்கள் வெளியேறினார்கள். இரண்டாவது வாய்ப்பில் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டும் அதற்கு உடன்படாத ஊழியர்கள் தற்போது பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் கைமாறிய போது ஊழியர்கள் கண்டிப்பாக ஓராண்டு காலம் பணியில் இருக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இதனிடையே நிறுவனம் தந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறிய ஊழியர்களே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றுவதாகவும், உரிய இழப்பீடுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலை வெளியிடவில்லை. ஆனால் பிடிஐ நிறுவனம் 180க்கும் அதிகமானோர் என தகவல் வெளியிட்டுள்ளது.
டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பிறகு , அந்த நிறுவனத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை என்பது 41.4% அதிகரித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 24 சர்வதேச பாதைகளில் புதிதாக விமான சேவையை தொடங்கியுள்ளது. அதேபோல உள்நாட்டில் 12 பாதைகளின் விமான சேவையை தொடங்கியுள்ளது .
சர்வதேச விமான சேவையில் ஏர் இந்தியா நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது, இருந்தாலும் உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ விற்கும் ஏர் இந்தியாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது .தற்போதைய சூழலில் இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு விமான சேவையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.