டொயோட்டா கார்களில் ஏர்பேக் பிரச்சனையா!! நம்பி கார் வாங்கியவர்களுக்கு இப்படியா பண்றது!
டொயோட்டா (Toyota) நிறுவனம் ஏர்பேக் பிரச்சனை காரணமாக அதன் 11.2 இலட்ச கார்களை திரும்ப அழைக்கிறது. இதன்படி, எந்தெந்த டொயோட்டா கார் மாடல்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன? என்பதையும், சம்பந்தப்பட்ட டொயோட்டா கார் உரிமையாளர்கள் எவ்வாறு இந்த பழுது பார்ப்புகளை மேற்கொள்ள வேண்டும்? என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
உற்பத்தி செய்த வாகனங்களில் பழுது இருப்பதை பின்னர் காலத்தில் கண்டுப்பிடித்ததன் காரணமாக, அந்த வாகனங்களை உற்பத்தி செய்த நிறுவனம் திரும்ப அழைப்பது வாடிக்கையான ஒன்றுதான். தவறான பாகம் பொருத்தப்பட்டதால் மட்டுமே வாகனங்கள் திரும்ப அழைக்கப்படும் என்றில்லை, வாகனத்தில் பொருத்தப்பட்ட பாகத்தை காட்டிலும் சிறப்பான ஒன்றை கண்டுப்பிடித்தாலும் விற்கப்பட்ட வாகனங்கள் திரும்ப அழைக்கப்படுவது உண்டு.
ஆனால், எப்படியிருந்தாலும் எந்தவொரு வாகன உற்பத்தி நிறுவனத்துக்கும் இது கடினமான முடிவு தான். பலத்தரப்பட்ட ஆலோசனைகளுக்கும், பரிந்துரைகளுக்கும் பிறகே இந்த நடவடிக்கையை நிறுவனங்கள் கையில் எடுக்கும். ஏனெனில், விற்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்களை திரும்ப அழைத்து, பழுதை சரிச்செய்து கொடுப்பது என்பது மிக பெரிய செயல்முறை.
இந்த தடவை, டொயோட்டாவும் சுமார் 11.2 இலட்சம் வாடிக்கையாளர்களை அவர்களின் டொயோட்டா வாகனங்களுடன் திரும்ப அழைக்கிறது. பொருத்தப்பட்ட ஏர் பேக்குகளில் பிரச்சனை இருப்பதை கண்டறிந்ததை அடுத்து இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை டொயோட்டா நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இதன்படி, ஒட்டுமொத்தமாக 11.2 இலட்ச வாகனங்கள் உலகம் முழுவதில் இருந்தும் திரும்ப அழைக்கப்படுகின்றன.
இந்த 11.2 இலட்ச டொயோட்டா வாகனங்களில் அவலான், காம்ரி, கரோல்லா, ஆர்.ஏ.வி4, லெக்ஸஸ் இ.எஸ்250, இ.எஸ்300எச், இ.எஸ்350, ஆர்.எக்ஸ்350 ஹைலேண்டர் மற்றும் சென்னா ஹைப்ரீட் கார்கள் அடங்குகின்றன. அதாவது, இந்த லிஸ்ட்டில் டொயோட்டா கார்கள் மட்டுமல்ல, டொயோட்டாவின் லக்சரி கார் பிராண்டான லெக்ஸஸின் கார்களும் உள்ளன.
2020ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டுவரையில், இந்த 3 வருட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மேற்கூறப்பட்ட கார்கள் மட்டுமே திரும்ப அழைக்கப்படுகின்றன. இந்த கார்களில் ஏர்பேக்கில் பிரச்சனை என சொல்வதை விட, ஏர்பேக்கை விரிக்கும் சென்சாரில் பிரச்சனையை டொயோட்டா கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த சென்சாரில் பழுது ஏற்பட்டால் காருக்குள் இருக்கும் பயணியை வகைப்படுத்தும் சிஸ்டம் செயல்படாமல் போகும் என்பதால் இந்த நடவடிக்கையை டொயோட்டா கையில் எடுத்துள்ளது. அதாவது, ஓட்டுனருக்கு அருகாமையில் முன் இருக்கையில் அமர்பவர் பெரியவரா அல்லது குழந்தையா என்பதை கண்டறிவதில் சென்சார்கள் முறையாக செயல்படுவது இல்லையாம்.
இதனால், விரிவடையும் ஏர்பேக் பயணிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். திரும்ப அழைக்கப்படும் மொத்த 11.2 இலட்ச டொயொட்டா வாகனங்களில் ஏறக்குறைய 10 இலட்ச வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். கடைசியாக கடந்த ஜூலை மாதத்தில் 3,500 ஆர்.ஏ.வி4 வாகனங்களை அமெரிக்காவில் டொயோட்டா நிறுவனம் திரும்ப அழைத்து இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் ஏர்பேக்கின் தேவையானது நாளுக்கு நாள் அத்தியவாசியமாகி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் கடந்த 30 வருடங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏர்பேக் மூலமாக தடுக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட நாட்டில் ஏர்பேக் சென்சார் விஷயத்தில் டொயோட்டா கோட்டை விட்டு இருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.