Ajith Vijayakanth: இன்றோடு எல்லா பஞ்சாயத்தும் ஓவர்… விஜயகாந்த் நினைவிடம் செல்கிறாரா அஜித்!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக அஜித் சென்னை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஜித் இறுதி அஞ்சலி செலுத்த இன்று செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த் நினைவிடம் செல்லும் அஜித்?: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் தேமுதிக-வின் தலைவருமாகவும் வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமா, அரசியல் என இரண்டிலும் தனியொரு சகாப்தமாக இருந்தவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வந்தார். சினிமா, அரசியல் இரண்டில் இருந்தும் விலகிய விஜயகாந்த், இறுதியாக கடந்த வாரம் 28ம் தேதி மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இளையராஜா, கவுண்டமணி, பிரபு உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அப்போது அஜித் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அவர், அதன் பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாயில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
இதனால் தான் அவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டும் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அஜித் டான்ஸ் ஆடியதும் சர்ச்சையானது. இந்நிலையில் இன்று சென்னையில் நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக அஜித் துபாயில் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கலைஞர் நூற்றாண்டு விழா செல்லும் முன்பு, விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்த வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் அஜித் கலந்துகொள்ளாதது சர்ச்சையாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் இவையனைத்துக்கும் இன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என அஜித் முடிவு செய்துள்ளாராம். இதனையடுத்து விஜயகாந்த் நினைவிடத்தில் செய்தியாளர்கள் மட்டுமின்றி ஏராளமான ரசிகர்களும் குவிந்துள்ளனர். ஆனாலும், இதுபற்றி அஜித் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை.
முன்னதாக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தாத கார்த்தி, சூர்யா, சிவகுமார், சசிகுமார், ஜெயம் ரவி ஆகியோர் கேப்டனின் நினைவிடம் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இவர்களது வரிசையில் இன்று அஜித்தும் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஒருவேளை கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக சென்னை திரும்பிய அஜித், விஜயகாந்த் நினைவிடம் செல்லவில்லை என்றால் அது இன்னும் பெரிய சர்ச்சையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.