அஜித்தின் பிடிவாதம்… 24 வருடங்களுக்குப் பிறகும் பேசப்படும் க்ளைமாக்ஸ்!
அப்போது நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி அஜித்தை வைத்து தொடர்ந்து படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். நிக் ஆர்ட்ஸ் அஜித்தின் சொந்த படநிறுவனம் போலவே இயங்கியது. பலரும் சக்ரவர்த்தியிடம் கதை சொல்கிறார்கள். அதில் ஒரு இளைஞன் சொல்லும் கதை சக்ரவர்த்தியின் கண்களை குளமாக்கிவிடுகிறது. இந்த கதையை நாம படமாக்குவோம் என்கிறார். அந்தப் படம்தான், முகவரி.
வி.இஸ்ட்.துரை இயக்கத்தில் வெளியான முகவரி 100 நாள்கள் ஓடியது. இதில் இசையமைப்பாளராகும் லட்சியத்தை கொண்ட ஸ்ரீதர் என்ற இளைஞனாக அஜித் நடித்தார். அவரது அண்ணனாக ரகுவரன். மொத்த குடும்பமுமே அஜித்தின் இசையமைப்பாளர் கனவுக்கு உறுதுணையாக இருக்கும். நடுவில் ஜோதிகாவின் காதலும் அஜித்துக்கு கிடைக்கும்.
இசையமைப்பாளராகும் கனவு அஜித்திற்கு நழுவிக்கொண்டே போகும். ஒருகட்டத்தில், தனது கனவை அடைய முடியாமல், காதலியை, வேறொருவனை திருமணம் செய்து கொள் என்று சொல்கிற அளவுக்கு நெருக்கடியை கொடுக்கும். காதல் போனாலும் பரவாயில்லை, லட்சியம் முக்கியம் என்பதில் உறுதியாக இருப்பார். இந்நிலையில், ரகுவரனுக்கு மாரடைப்பு ஏற்படும். குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அஜித் தலையில் விழும். அவரால் அதனை உதறியிருக்க முடியும். ஆனால், தனக்காக அனைத்தும் செய்த குடும்பத்துக்காக தனது லட்சியத்தைத் துறந்து வேலைக்குச் செல்வதென முடிவு செய்வார்.
சினிமாவில் பொதுவாக வெற்றி பெற்றவர்களின் கதையையே காட்டுவார்கள். வெயில் மாதிரி அரிதாக தோல்வியடைந்தவர்களின் கதைகள் வரும். முகவரி அப்படியான படம். 175 நாள்கள் ஓட வேண்டிய படத்தை இப்படி பண்ணிட்டீங்களே என்று பலரும் விமர்சித்தனர். வசந்த மாளிகையில் சிவாஜி இறந்து போவதாகத்தான் கிளைமாக்ஸ். பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, பிறகு மாற்றி எடுத்தார்கள். அப்படி முகவரி கிளைமாக்ஸையும் நாயகன் வெற்றி பெறுவது போல் மாற்ற வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினர். ஆனால், இந்தப் படத்தின் நாயகன் தோல்வியடைந்தவன் என்பதில் அஜித் உறுதியாக இருந்தார். படம் எவ்வளவு நாள் ஓடுதோ ஓடட்டும், நமக்கு அதைவிட படம் கொடுக்கிற இம்பாக்ட் முக்கியம் என்று தனது முடிவில் உறுதியாக இருக்க, படம் அவர் வேலைக்குச் செல்லும் முடிவுடன் தனியாக நடந்து செல்வதுடன் நிறைவடையும்.
இந்த கிளைமாக்ஸ் காரணமாக முகவரி இப்போதும் ரசிகர்களால் நினைவுகூப்படும் படமாக உள்ளது. நாயகன் வெற்றி பெற்றதாக காட்டியிருந்தால் பத்தோடு பதினொன்றாக மறக்கப்பட்டிருக்கும். பிப்ரவரி 19, முகவரி வெளியாகி 24 வருடங்கள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இப்போதுவரை முகவரியின் பாடல்கல், காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
முகவரி படத்தின் கிளைமாக்ஸை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று, சில வருடங்களுக்குப் பின் அஜித் இசையமைப்பாளர் ஆவது போல் மான்டேஜ் காட்சிகளை விநியோகஸ்தர்கள் படத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த துண்டுக் காட்சி இருந்தாலும், குடும்பத்திற்காக லட்சியத்தைத் துறந்த தோல்வி கண்ட ஒருவனின் கதையாகவே முகவரி ரசிகர்களின் மனதில் தங்கிப் போனது. அந்த காவிய சோகமே இன்றும் அந்தப் படம் கொண்டாட காரணமாக உள்ளது.