அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும்.? வெளியான முக்கிய அறிவிப்பு.!
ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம்.
தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட காவல் ஆணையர், மாநகர ஆணையர் மதுபாலன் , ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில்பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
ஏனென்றால், முன்னதாக மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் தமிழக அரசு சார்பில் 44 கோடி ரூபாய் செலவீட்டில் 66 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மைதானத்தில் தான் அடுத்த ஆண்டு 2024 ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்க்க காத்திருந்தனர்.
ஆதலால், அடுத்த ஆண்டு 2024 ஜல்லிக்கட்டு போட்டியானது வழக்கமான இடத்தில் நடைபெறுமா அல்லது புதிய மைதானத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே, இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் அடுத்த வருடம் 2024 ஜல்லிக்கட்டு போட்டியானது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது வழக்கமாக நடைபெறும் இடத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூன்று ஆலோசனை கூட்டத்தில் முதல் ஆலோசனை கூட்டம் முடிவடைந்துள்ளது. அடுத்தடுத்த ஆலோசனை கூட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என கூறப்படுகிறது.