தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருவதால் 6 மாநிலங்களுக்கு அலர்ட்!
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், உ.பியின் மீரட்டில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என எச்சரித்திருக்கிறது. வடமேற்கு இந்தியாவில் இமயமலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக நீடிக்கும். அதனைத் தொடர்ந்து, 3 நாட்களுக்கு பிறகு 3-5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வாகன ஓட்டுநா்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் வாகனங்களை இயக்கும்படி வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.