இனி வர போகும் டாடா கார் எல்லாம் இப்படித்தான் இருக்க போகுது!! காருக்கு உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் எதிர்கால எலக்ட்ரிக் கார்களுக்காக 2 புதிய பிளாட்ஃபாரங்களை உருவாக்கி உள்ளது. அதில் ஒன்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பன்ச் இவி எலக்ட்ரிக் காரையும் டாடா நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய டாடா எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளன.
முற்றிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ள இந்த புதிய இவி பிளாட்ஃபாரத்திற்கு ஆக்டி-இவி (அல்லது ஆக்டிவ்) என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு பன்ச் இவி மட்டுமின்றி, வரும் காலங்களில் ஹெரியர் இவி, கர்வ் இவி மற்றும் சஃபாரி இவி கார்களும் உருவாக்கப்பட உள்ளன.
ஆக்டி-இவி பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படும் டாடா எலக்ட்ரிக் கார்கள் செயல்திறன்மிக்கவைகளாக இருக்கும் என்பது மட்டுமின்றி, போதுமான இடவசதியையும் கொண்டவைகளாக இருக்கும். இதன் மூலமாக, மக்களை ஈர்த்து எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் 80%-க்கும் அதிகமான பங்கை பெற வேண்டும் என்பது டாடா மோட்டார்ஸின் நோக்கமாக உள்ளது.
புதிய ஆக்டி-இவி பிளாட்ஃபாரத்தை நிறுவனத்தின் 2வது ஜென்ரேஷன் பிளாட்ஃபாரமாக டாடா மோட்டார்ஸ் பார்க்கிறது. இந்த பிளாட்ஃபாரத்தின் அளவு பெரியதாக இல்லை. இதனால், பல விதமான உடலமைப்புகளில் எலக்ட்ரிக் கார்களை உருவாக்க முடியாது என்றாலும், அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் கார்களை உருவாக்க முடியும் என டாடா நம்புகிறது.
இதனுடன், விரைவில் 3வது ஜென்ரேஷன் பிளாட்ஃபாரத்தையும் டாடா மோட்டார்ஸ் வடிவமைக்க உள்ளது. பன்ச் இவி போன்ற சிறிய அளவிலான எலக்ட்ரிக் காருக்காக இல்லாமல், சற்று விலையுயர்ந்த, அளவில்-பெரியதான பிரீமியம் எலக்ட்ரிக் கார்களுக்கானதாக ஜென்ரேஷன்-3 பிளாட்ஃபாரம் இருக்கும் என டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஆனந்த் குல்கரனி தெரிவித்துள்ளார்.
3வது ஜென்ரேஷன் பிளாட்ஃபாரத்தை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலகளவில் பிரபலமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துடன் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஜாகுவார் லேண்ட் ரோவரின் இ.எம்.ஏ பிளாட்ஃபாரத்தையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் பிரிவாக விளங்கும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபைலிட்டியில் சுமார் 200 கோடி டாலர்களை முதலீடு செய்வதாக டாடா குழுமம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அத்துடன், டாடா மோட்டார்ஸின் குஜராத், சனந்த் தொழிற்சாலையில் ஒரு பகுதி முழுவதுமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்காக மாற்றப்பட உள்ளது.
சனந்த் தொழிற்சாலையில் இந்த ஒரு பகுதியானது, இந்திய சந்தையை விட்டு சென்றதால் டாடா மோட்டார்ஸிடம் ஃபோர்டு மோட்டார் விற்ற அதன் தொழிற்சாலையாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆக்டி-இவி பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் காரின் உடற்கூட்டில் மொத்தம் 4 லேயர்கள் உள்ளன. அதேநேரம், ஜென்ரேஷன்-2 பிளாட்ஃபாரத்தில் காரின் உடற்கூடு சற்று அகலமானதாக வடிவமைக்கப்படுகிறது.
பேட்டரியின் அளவை பெரியதாக வடிவமைப்பதன் மூலமாக எலக்ட்ரிக் காரின் ரேஞ்சை அதிகமாக பெற முடியும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஜென்ரேஷன் 2 பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்கள் 300கிமீ-இல் இருந்து 600கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஜென்ரேஷன் 2 பிளாட்ஃபாரத்தில் முன் சக்கர டிரைவ், பின் சக்கர டிரைவ் கார்களை மட்டுமின்றி, அனைத்து சக்கர டிரைவ் எலக்ட்ரிக் கார்களையும் உருவாக்கலாம் என டாடா மோட்டார்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.