கொரியன் கார்கள் எல்லாம் ஓரம் போக வேண்டியதுதான்!! இந்த புது டாடா காரை பற்றி தான் எல்லா பக்கமும் பேச்சு!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காராக ஹெரியர் இவி -ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஹெரியர் இவி-க்கு அடுத்து, டாடா மோட்டார்ஸின் அடுத்த எலக்ட்ரிக் காராக கர்வ் இவி (Curvv EV) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்வ் கான்செப்ட் மாதிரியை கடந்த 2023இன் துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது. அதாவது, அந்த கான்செப்ட் மாதிரியின் அடிப்படையில் தான் கர்வ் கார் இருக்கும். டாடா கர்வ் கார் ஆனது கர்வ் இவி என்கிற பெயரில் எலக்ட்ரிக் காராக மட்டுமின்றி, பெட்ரோல் காராகவும் இன்னும் சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் தற்போது, பெட்ரோல் என்ஜின் காராகவும், அதேநேரம் டீசல் என்ஜின் உடனும் டாடா கர்வ் வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலமாக, மார்க்கெட்டில் பிரபலமான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக டாடா கர்வ் விளங்கும் என கூறப்படுகிறது.
நிச்சயமாக, கிரெட்டா மற்றும் செல்டோஸை காட்டிலும் முற்றிலும் மாடர்ன் தோற்றத்தில் கர்வ் பெட்ரோல்/ டீசல் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த முயற்சிக்கும். அதேநேரம், கர்வ் இவி எலக்ட்ரிக் காருடன் ஒப்பிடுகையில் கர்வ் பெட்ரோல்/ டீசல் கார் தோற்றத்தில் சற்று வித்தியாசத்துடன் இருக்கும். குறிப்பாக, காரின் முன்பக்கத்தில் திறந்த கிரில் பகுதி டாடா கர்வ் காரில் வழங்கப்படும்.
ஆனால், கர்வ் இவி-இல் எலக்ட்ரிக் கார் என்பதால் மூடப்பட்ட கிரில் பகுதி இருக்கும். 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஐ பெட்ரோல் என்ஜின் டாடா கர்வ் காரில் வழங்கப்படலாம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்ஸ் வழங்கப்படலாம். அதேநேரம், டாடா நெக்ஸான் எஸ்யூவி காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ ரெவோடார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் டாடா கர்வ் காரில் வழங்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இதில் இரண்டில் ஏதேனும் ஒரு டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தான் கர்வ் காரில் கொடுக்கப்படும்.
இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் டாடா கர்வ் எஸ்யூவி காரில் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கும் பிரகாசமான வாய்ப்புள்ளது. ஏனெனில், பல டாடா கார்களில் ஏற்கனவே டீசல் என்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு வருகிறது. இது டாடா கர்வ் காருக்கு மிக முக்கியமான அனுகூலமாக இருக்கும். ஏனெனில், கிரெட்டா, செல்டோஸ் என சில மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் மட்டுமே தற்சமயம் டீசல் என்ஜின் ஆப்ஷன் கிடைக்கிறது.
டாடா கர்வ் இவி காரை போன்று, டாடா கர்வ் பெட்ரோல்/ டீசல் கார்களும் இந்த 2024ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. விற்பனையில் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனம் இவிஎக்ஸ் காரையும், ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவின் எலக்ட்ரிக் வெர்சனையும், சிட்ரோனின் இசி3 ஏர்கிராஸ் கார்களும் தயாராகி வருகின்றன.