இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.. ரஞ்சி டிராபியில் சொதப்பிய சிஎஸ்கே வீரர்.. இரு முறை டக் அவுட்!

ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாடி வரும் அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே தொடர்ந்து 2 போட்டிகளில் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் அஜிங்கியா ரஹானே. கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது போதிய அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை என்பதால், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது இடத்தை ஸ்ரேயாஸ் ஐயர் பிடித்து கொண்டார். ஆனால் ஐபிஎல் தொடரின் போது ரஹானே உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார். அதன் பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் ரஹானே சேர்க்கப்பட்டார்.
அந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது துணை கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். ஆனால் அதன்பின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மீண்டும் பிசிசிஐ அஜிங்கியா ரஹானேவை ஒதுக்கிவிட்டு, மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயரை அணிக்குள் கொண்டு வந்தது. அவருக்கு தேர்வு குழு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இந்திய அணியில் இருந்து நீக்கியது ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்றது.
ஆனாலும் எந்தவித கருத்தும் கூறாமல் அஜிங்கியா ரஹானே மீண்டும் ரஞ்சி டிராபி பக்கம் கவனத்தை திருப்பினார். அதில் ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியில் அஜிங்கியா ரஹானே டக் அவுட்டான நிலையில், அவரின் ஃபார்ம் குறித்து கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் கேரளா அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து மும்பை அணி தரப்பில் கோகுல் பிஸ்டா – லால்வானி கூட்டணி களமிறங்கியது. கேரளா அணி தரப்பில் பேசில் தம்பி முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே கோகுல் பிஸ்டா டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து வந்த கேப்டன் ரஹானே 2வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவரது இடத்திற்கு ரஹானே வருவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ரஞ்சி டிராபி தொடரில் அடுத்தடுத்த போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறி வருகிறார்.