இதெல்லாம் அநியாயம்.. உயிரைக் கொடுக்கும் ரசிகர்கள் பாக்கெட்டில் கை வைத்த ஐபிஎல் அணி.. கடும் விமர்சனம்
ஐபிஎல் அணிகளில் கோப்பை வெல்லாத போதும் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அந்த அளவுக்கு அந்த அணி மீது பாசத்தை கொட்டி வருகிறார்கள் அந்த அணியின் ரசிகர்கள்.
அப்படிப்பட்ட ரசிகர்களை வைத்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பணம் சம்பாதிக்க முடிவு செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பி இருக்கிறது. என்ன நடந்தது?
2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 22 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆட உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அந்தப் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு புதிய விஷயத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது. அதை ஒரு நிகழ்ச்சியாக நடத்த உள்ளது.
அந்த நிகழ்ச்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இணையதளம் மற்றும் செயலியில் காணலாம் என கூறி இருந்தது. ஆனால், அதை இலவசமாக பார்க்க முடியாது. அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியை மொபைல் அல்லது லாப்டாப்பில் காண 99 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளது.
இரண்டு மாதங்கள் தினமும் மூன்றரை மணி நேரம் நடக்கும் ஐபிஎல் டி20 போட்டிகளையே இலவசமாக ஒளிபரப்பி வரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெறும் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்கு 99 ரூபாய் கட்டணம் கேட்பது சரியா? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் குறைந்தபட்சம் 10 லட்சம் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண 99 ரூபாய் செலுத்தினால் கூட 9.90 கோடி ரூபாய் கிடைக்கும்.
எந்த பெரிய வெற்றியும் பெறாத நிலையிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பின்தொடர்ந்து வரும் ரசிகர்களை இப்படித்தான் நடத்துவதா? என அந்த அணியின் செயலை பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.