கேரளாவுக்கு மத்திய அரசு அநீதி இழைத்திருப்பதாக குற்றச்சாட்டு… டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நிதி பகிர்வில் கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு அநீதி இழைத்திருப்பதாகக் கூறி டெல்லியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வரிப் பகிர்வு விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில முதலமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் இருந்து பினராயி விஜயன் தலைமையில் ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி சென்றனர். இதில், கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, திமுக சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதைதொடர்ந்து ஜந்தர் மந்தரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் சிங் மான், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நிதி பகிர்வில் கேரளாவிற்கு அநீதி இழைக்கப்படுவதற்கு எதிராக வலுவான எதிர்ப்பை பதிவு செய்திருப்பதாகக் கூறினார். மாநிலங்களின் ஒன்றியமாக கருதப்படும் ஒரு ஜனநாயகம் மெதுவாக ஜனநாயகமற்ற ஒன்றியமாக முடங்கிக் கொண்டிருப்பதாகவும் கவலை தெரிவித்தார். இந்த போராட்டம் மத்திய, மாநில உறவில் சமநிலையை பராமரிக்க உதவும் என்றும் இன்றைய தினம் இந்திய வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாளாக இருக்கும் என்றும் பினராயி விஜயன் கூறினார்.