பிகாரில் மீண்டும் கூட்டணி மாறுகிறதா? ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா நிதிஷ் குமார்?
nitishபிகாரில் மீண்டும் கூட்டணி மாறுகிறதா என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் விளக்கம் அளித்துள்ளது.
பாஜக கூட்டணிக்கு பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் செல்லவிருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து, இந்தியா கூட்டணியில் தான் இருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி விளக்கமளித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணியை அமைப்பதில் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகித்தார். அதன்பிறகு இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கடந்த கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. மேலும், பிகாரில் அவரது கூட்டணி கட்சியான லாலுபிரசாத் கட்சியுடனும் அவருக்கு அதிருப்தி வலுத்து வருகிறது.
இதனால் அவர் இந்தியா கூட்டணியை விட்டுவிட்டு பாஜக உடன் விரைவில் கைகோர்ப்பார் என்று தகவல் வெளியானது. இந்த சூழலில் பாட்னாவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. விஜய்குமார் சின்ஹா உடன் கலந்துரையாடினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் உமேஷ் சிங் பேசியபோது, இந்தியா கூட்டணியில் தான் தாங்கள் இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். பரபரப்பான சூழலில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் 27,28 தேதிகளில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.