சதம் அடித்த ஆலி போப்… இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் ஆலி போப் சிறப்பாக விளையாடி 148 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இங்கிலாந்து அணி இழந்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 436 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 86 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 87 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லே 31 ரன்களும், பென் டக்கெட் 47 ரன்களும் எடுத்தனர். ஜோ ரூட் 2 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டா 10 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலி போப் சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். 28 பந்துகளை எதிர் கொண்ட அவர் 17 பவுண்டரியுடன் 148 ரன்கள் குவித்துள்ளார்.
விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 34 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ரெகான் அகமது 16 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இன்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் 148 ரன்களும், ரெகான் அகமது 16 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா விட 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. போட்டி முடிவதற்கு இன்னும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு காணப்படுகிறது.