அல்போன்ஸ் புத்திரனுக்கு சிகிச்சை தேவை: ரசிகர்கள்
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான ‘பிரேமம்’ தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய ‘கோல்டு’ படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்திருந்தனர். தற்போது கிப்ஃட் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நேரம் படத்துக்குப் பின் ரெட் ஜெயிண்ட் அலுவலகத்துக்கு வந்த நான், உங்களிடம் அரசியலுக்கு வரும்படி தெரிவித்தேன். பின், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை கொன்றவர்களைக் கண்டுபிடிக்கும்படி கூறினேன். இப்போது விஜயகாந்தை கொன்றவர்களையும் நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். முன்னதாக, இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் சார் மற்றும் ஸ்டாலின் சாரைக் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதை நீங்கள் அப்படியே விட்டுவிட்டால் அவர்களின் அடுத்த இலக்கு நீங்களும், ஸ்டாலின் சாரும் தான்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு ரசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது உண்மையா? அல்போன்ஸ் புத்திரனின் கணக்கை யாராவது முடக்கிவிட்டார்களா? இல்லை அவரே பதிவிட்டிருக்கிறாரா என ரசிகர்கள் குழம்பினர்.
அதற்கு, முன்பாக நடிகர் அஜித் குமார் குறித்து பதிவொன்றைப் பகிர்ந்தார். அதில், “இது அஜித்குமார் சாருக்கு. நிவின் பாலியும் சுரேஷ் சந்திராவும் நீங்கள் அரசியலுக்கு வர உள்ளாகக் கூறியதைக் கேட்டேன். இது எப்போது என்றால், பிரேமம் படத்தில் நிவின் பாலியின் நடிப்பைக் கண்டு வியந்த உங்கள் மகள் அனோஷ்காவுக்காக நிவின் பாலியை வீட்டிற்கு அழைத்து பேசினீர்களே அப்போது. ஆனால், இதுவரை உங்களைப் பொதுவெளியிலோ அரசியல் கட்சிகளிலோ பார்க்கவில்லை. ஒன்று அவர்கள் என்னிடம் பொய் சொல்லியிருக்கின்றனர் இல்லையென்றால் நீங்கள் அதை மறந்துவிட்டீர்கள் அல்லது வேறு யாரோ உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள். இது மூன்றும் இல்லையென்றால் எனக்கு கடிதம் வாயிலாக நீங்கள் பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், நான் உங்களை நம்புகிறேன். பொது மக்களுக்கும் நம்புகிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் சிலர் அல்போன்ஸ் புத்திரனைக் கண்டித்தாலும், பெரும்பாலான ரசிகர்கள், ‘அல்போன்ஸ் மனநில பாதிப்பில் இருக்கிறார். அவரை விமர்சிப்பது சரியல்ல. அல்போன்ஸ் புத்திரன் விரைந்து மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம், “சினிமா திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஏஎஸ்டி (ஆடிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்) உள்ளதை கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல், விடியோக்கள், குறும்படங்கள் மற்றும் முடிந்தால் ஓடிடியில் படங்களை இயக்குவேன். ” என அல்போன்ஸ் தெரிவித்திருந்தார்.
தற்போது, அவர் பதிவிடும் பதிவுகளுக்கு மனநல பாதிப்பும் காரணமாக இருக்கலாம் என்றே பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.