ஆச்சரியம் நிறைந்த அமானுஷ்ய சிவன் கோயில்!

குஜராத் மாநிலம், பாவ் நகர் மாவட்டம், கோலியாக் கிராமத்தின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது நிஷ்கலங்க் மகாதேவ் சிவாலயம்.
நிஷ்கலங்க் என்றால், சுத்தமான, தூய்மையான, குற்றமற்ற, பரிசுத்தமான என்று பொருள். உலகப் புகழ் பெற்ற இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலையில் உள்ளது. இக்கோயில் நிர்மாணிக்கப்படும்போதே கடலுக்குள் கட்டப்பட்டதா அல்லது காலமாற்றத்தில் இது கடற்கரை கோயிலானதா என்பது இன்னும் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமை மிக்கது இந்தக் கோயில். ஆதலால் இது மகாபாரத காலத்துக்கும் முற்பட்டதாக அறியப்படுகிறது. போரில் உற்றார் உறவினர் என அனைவரையும் கொன்ற பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணரிடம் தங்கள் பாவம் தீர வழி கேட்க, அவர்களிடம் ஒரு கருப்பு கொடியையும், ஒரு கருப்பு பசுவையும் கொடுத்து, ‘இந்தக் கொடியை எடுத்துக்கொண்டு, பசுவை பின்பற்றிச் செல்லுங்கள். எங்கு இந்தக் கொடியும் பசுவும் வெள்ளையாக நிறம் மாறுகிறதே, அப்போது உங்கள் பாபம் தொலைந்தது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த இடத்தில் ஈசனை நினைத்து தவம் செய்து பாப விமோசனம் பெறுங்கள்’ என்று கூறினார்.
அதன்படியே சென்ற பாண்டவர்கள், இந்தத் தலத்துக்கு வரும்போது கொடியும் பசுவும் வெள்ளை நிறமாக மாற அங்கேயே சிவபெருமானை நினைத்து தவமியற்றினர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பாண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக லிங்க ரூபத்தில் காட்சி அளித்தாராம். அதன் பிறகு பஞ்சபாண்டவர்கள் ஐவரும் தனித்தனியாக ஒவ்வொரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டததாகத் தல புராணம் கூறுகிறது.