3 ஆண்டுக்கு பின் இந்தியாவுக்கு வந்த வெனிசுலா கச்சா எண்ணெய்.. ஓடிபோய் வாங்கிய அம்பானி..!
வெனிசுலா கச்சா எண்ணெயை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்த பிறகு, 2020 ஆம் ஆண்டில் லத்தீன் அமெரிக்க நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.
2023 அக்டோபரில் வெனிசுலாவின் எண்ணெய் துறை மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் – முக்கியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) வெனிசுலா எண்ணெய் வாங்க துவங்கியுள்ளது. ரஷ்ய எண்ணெய் போலவே வெனிசுலா எண்ணெய்யும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்குப் பிறகு, டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024 ஆகிய இரண்டு மாதங்களுக்கு வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்குவதில் இந்தியா முதலிடம் பிடித்தது.
டிசம்பரில் வெனிசுலாவிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் அனுப்புவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 191,600 பேரல்கள் (bpd), ஜனவரியில், 254,000 பேரலாக ஆக உயர்ந்ததுள்ளசு. லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா-வின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவுக்கு வருகிறது.
வெனிசுலா நாட்டின் மொத்த எண்ணெய் ஏற்றுமதி 557,000 பேரல் என சந்தை பகுப்பாய்வு நிறுவனமான Kpler தரவுகள் கூறுகிறது. செப்டம்பர் 2020 இல் தெற்காசிய நாட்டிற்கு வெனிசுலா கடைசியாக கச்சா எண்ணெயை அனுப்பியது, அதே ஆண்டு நவம்பரில் இந்திய துறைமுகங்களில் கடைசியாக இறக்குமதி செய்யப்பட்டது என கப்பல் போக்குவரத்து தரவு காட்டுகிறது.
இந்தியாவில் குறிப்பாக தனியார் துறை சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் Nayara Energy (NEL) – 2019 இல் அமெரிக்கத் தடைகளை விதிக்கும் முன் வெனிசுலா கச்சா எண்ணெயை வழக்கமாக வாங்கும் நிறுவனங்களாக இருந்தது.
பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி சில மாதங்களில் நிறுத்தப்பட்டது . 2019 ஆம் ஆண்டில் வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடாகும், இது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு 16 மில்லியன் டன்கள் கச்சாவை வழங்குகிறது.
அக்டோபர் 2023 இல், வெனிசுலாவின் பெட்ரோலியத் துறை மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியது, ஆறு மாதங்களுக்கு வரம்பற்ற எண்ணெய் ஏற்றுமதியை அங்கீகரித்தது, இதன் வாயிலாகவே சப்ளை துவங்கியுள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (OPEC) உறுப்பினரான வெனிசுலா, உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது.