அம்பானி கையில் வந்த ரூ.70352 கோடி மீடியா சாம்ராஜ்ஜியம்! டிஸ்னி உடன் இணைப்பு, நீதா-வுக்கு உயர் பதவி!!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி நீண்ட கால பேச்சுவார்த்தைக்குப் பின்பு தங்களுடைய இந்திய வர்த்தகத்தை இணைப்பதோடு, புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டு உள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் ஏற்கனவே அறிவித்ததை போலவே புதன்கிழமை கூட்டணி ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன. இந்த கூட்டணி நிறுவனத்தில் வயாகாம்18 மற்றும் ஸ்டார் இந்தியா ஆகிய நிறுவனங்களின் வணிகங்கள் இணைக்கப்படும்.
இந்த புதிய கூட்டணி நிறுவனத்தின், வளர்ச்சிக்காக ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 11,500 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தனி முதலீட்டின் மூலம் வயாகாம்18 அல்லாமல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனிப்பட்ட முறையில் பங்குகளைப் பெற்றுள்ளது.
இந்த இணைப்பு நிறுவனத்தில் வயாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா கூட்டணி சுமார் 8.5 பில்லியன் டாலர் அதாவது 70,352 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருக்கும். இந்த இணைப்பு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, இந்த கூட்டணி நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிக்க கட்டுப்பாட்டில் இருக்கும்.
இக்கூட்டணி நிறுவனத்தில் ரிலையன்ஸ் 16.34% பங்குகளையும், வயாகாம்18 46.82% பங்குகளையும், டிஸ்னி 36.84% பங்குகளை வைத்திருக்கும். இதோடு ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் கூறியது போல் நீதா அம்பானி இந்த கூட்டு நிறுவனத்தின் தலைவராகவும், உதய் ஷங்கர் துணைத் தலைவராகவும் இருந்து வழிகாட்டுவார்கள் என்று கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நீதிமன்றம் அனுமதி உடன் வயாகாம்18 நிறுவனம் ஊடக பிரிவு, ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் ஒழுங்குமுறை, பங்குதாரர்கள் மற்றும் பிற வழக்கமான ஒப்புதல்கள் கிடைத்த பின்னர், 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு அல்லது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த இணைப்பு முடிவடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணி நிறுவனத்திற்கு இந்தியாவில் டிஸ்னி திரைப்படங்கள் மற்றும் தயாரிப்புகளை விநியோகிப்பதற்கான பிரத்யேக உரிமைகள் வழங்கப்படும். மேலும், 30,000 க்கும் மேற்பட்ட டிஸ்னி கன்டென்ட் பயன்படுத்துவதற்கான உரிமம் வழங்கப்படும்.
ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் தலா ஒரு ஸ்ட்ரீமிங் சேவையையும், 120 தொலைக்காட்சி சேனல்களையும் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் 28 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ரிலையன்ஸ் சுமார் 8.5 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனத்துடன் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது.
உலகின் வேகமாக வளரும் பொழுதுபோக்கு சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இணைந்து மாபெரும் ஊடக பேரரசாக உருவாகும்.
வயாகாம் 18 என்பது டிவி18, போதி ட்ரீ சிஸ்டம்ஸ், பாராமவுண்ட் நெட்வொர்க்ஸ் EMEAA கூட்டணி நிறுவனமாகும். இப்புதிய கூட்டணியில் வயாகாம் 18 46.82 சதவீத பங்குகளை கொண்டு இருக்கும்.