6 ஆண்டுகளுக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் அணிக் குடும்பத்தில் இணையும் அம்பதி ராயுடு!

கிரிக்கெட்டை விட்ட பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பின்னர் விலகிய முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர் அம்பதி ராயுடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் சர்வதேச டி20 லீக் தொடரான ஐஎல்டி20 லீகில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியுடன் இணையவிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் துபாயில் நடைபெறவிருக்கும் ஐஎல்டி20 லீகில் மும்பை இந்தியன்ஸ் (எமிரேட்ஸ்) அணிக்காக ஆடவிருக்கிறேன். தொழில்பூர்வ கிரிக்கெட் ஆட்டத்தை ஆடும்போது அரசியல் கட்சியில் இருக்கக் கூடாது என்பதால் இப்போதைக்கு அரசியலிலிருந்து விலகுவதாகப் பதிவிட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு அம்பதி ராயுடு ஆடுவதன் மூலம் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக் குடும்பத்துடன் இணைகிறார். 2010 ஐபிஎல் சீசன் முதல் அம்பதி ராயுடு மும்பை இந்தியன்ஸ்காக 8 சீசன்களில் ஆடியுள்ளார். இவர் அணியில் ஆடியபோது 3 முறை ஐபிஎல் சாம்பியன் ஆனது மும்பை. பிறகு சிஎஸ்கேவுக்கு மிகப்பிரமாதமாக ஆடி ஐபிஎல் 2023 உடன் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், டிசம்பர் 28, 2023 அன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் ராயுடு. இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளிலும் 5 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார் அம்பதி ராயுடு. 2019 உலகக் கோப்பையில் 4ம் நிலைக்குத் தகுந்தவர் என்று கருதப்பட்டு தேர்வு செய்யப்படும் நேரத்தில் கடைசி தருணத்தில் இவருக்குப் பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டு விஜய் சங்கர் 3டி பிளேயர் என்று அப்போதைய அணித் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூற, ராயுடு தான் 2019 உலகக் கோப்பையை 3டி கண்ணாடி அணிந்து பார்ப்பேன் என்று கிண்டலடித்தது சர்ச்சைகள் கிளம்பியது. அவரது இந்தக் கேலிப் பேச்சினால் இவர் மீது பிசிசிஐ அதிருப்தி அடைந்தது.
சிஎஸ்கேவுக்கு இவரது அபார பங்களிப்பு 2018, 2021, 2023 கோப்பைகளை பெற்றுத்தந்தது. இந்திய அணிக்காக இவர் ஆடிய டி20 போட்டிகளில் சோபிக்கவில்லை. மொத்தம் 42 ரன்களைத் தான் எடுத்தார்.
55 ஒருநாள் போட்டிகளில் 1694 ரன்களை 124 என்ற அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோருடன் 3 சதங்கள், 10 அரைசதங்கள் என்று எடுத்துள்ளார். ராயுடு முதன் முதலில் ரஞ்சி டிராபியில் 210 ரன்களை எடுத்த போது சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இவர்தான் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு என்ன காரணத்தினாலோ ஹைதராபாத் அணி இவரை வேறு மாதிரி நடத்தத் தொடங்கியது. அதனால் இவரது கரியர் ஹைதராபாத்திலிருந்து தொடங்கி பரோடா, விதர்பா என்று கிளை பிரிந்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விரயம் செய்யப்பட்ட எண்ணற்ற வீரர்களில் திறமை வாய்ந்தவர் அம்பதி ராயுடு.