அமெரிக்கா தொலைத்த 3 பயங்கர அணுகுண்டுகள்.. வரலாற்றின் கருப்பு பக்கம்..!!
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்க மிகவும் கொடூரமான அழிவு சக்தியை ஏற்படுத்தும் அணுகுண்டுகள் மூன்றை தொலைத்துவிட்டது. மாயமாகிப் போன அந்த அணுகுண்டுகள் என்னவாயின என்பது பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதில் ஒரு அணுகுண்டு பிலிப்பைன்ஸ் கடலுக்கு அடியில் வெடிக்காத நிலையில் புதைந்து கிடப்பதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வெடிகுண்டின் சக்தி இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா வீசிய குண்டைவிட 70 மடங்கு அதிக பேரழிவைத் தரக்கூடிய திறன் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த மூன்று அணுகுண்டுகளும் 1958 முதல் 1968 வரையிலான பத்தாண்டு காலகட்டத்தில் மாயமானதாகக் கூறப்படுகிறது
காணாமல் போன இந்த மூன்று அணுகுண்டுகளும் என்னவாயின என்பது பற்றிய விவரங்கள் யாருக்கும் இதுவரை தெரியவில்லை.
1950 ஆம் ஆண்டு முதல் இதுவரை புரோக்கன் ஆரோ (Broken Arrow) எனப்படும் நிகழ்வுகள் இரண்டு டஜன் முறைகளுக்கு மேல் நடைபெற்றுள்ளது. புரோக்கன் ஆரோ என்றால் அமெரிக்க அணு ஆயுதங்களின் இழப்பு என்று அர்த்தம்.
திருட்டு, எதிர்பாராதவிதமாக வெடித்தல், காணாமல் போவது போன்றவை இதில் அடங்கும். இத்தனை சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதிலும் இதுவரை மூன்று அணுகுண்டுகள் காணாமல் போனது மட்டுமே அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல் அணுகுண்டு அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள டைபீ தீவில் 1958 ஆம் ஆண்டு பிப்ரவரியில் காணாமல் போனது. அந்த குண்டை சுமந்து வந்த விமானத்தின் எடை அதிகமாக இருந்ததால் தரையிறங்குவதில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதற்காக எடையைக் குறைப்பதற்காக விமானத்தில் இருந்து வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த குண்டு மீட்கப்படவில்லை.
இரண்டாவது குண்டு 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று ஒரு போர் விமானத்தில் கொண்டு சென்றபோது திடீரென அந்த விமானம் நிலைகுலைந்து பைலட்டுடன் பிலிப்பைன்ஸ் கடலுக்குள் விழுந்தது. விமானி உயிரிழந்தார். அந்த குண்டு மாயமானது.
கடைசியாக 1968 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதியன்று அமெரிக்க அணுஆயுத நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஸ்கார்பியன் அட்லான்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் 99 பேர் உயிரிழந்தனர். இதில் இருந்த இரண்டு அணுகுண்டு முனை டார்பிடோ ஏவுகணைகளும் காணாமல் போயின. மூழ்கிய நாசகாரி நீர்மூழ்கி கப்பலும் காணாமல் போன அணு ஆயுதங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுதான் கடைசியாக ஆவணப்படுத்தப்பட்ட புரோக்கன் ஆரோ சம்பவமாகும். அமெரிக்க அணுசக்தி வரலாற்றில் இந்த மூன்றும் இதுவரை புரியாத புதிராகவே விளங்குகின்றன. அமெரிக்க குழுக்கள் விரிவான தேடுதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், காணாமல் போன குண்டுகளின் இருப்பிடம் தெரியவில்லை. இதனால் புவிசார் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் அச்சத்தை இன்னும் நீட்டித்துள்ளதலு.
உளவு பார்த்தல் மற்றும் நாசவேலை முதல் அமெரிக்க அரசு அதிகாரிகளின் மூடிமறைப்பு வரை பல்வேறு சந்தேகங்கள் இந்த சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பரவின. ஆனாலும் உண்மைக் காரணங்கள் தெரியவில்லை.
இதனிடையே காணாமல் போன அணுகுண்டுகள் வெடிப்பை ஏற்படுத்தும் ஆபத்து குறைவாக இருப்பதாக பிபிசி நிறுவனம் தெரிவிக்கிறது. இருந்தாலும் காணாமல் போன அந்த மூன்று அமெரிக்க அணுகுண்டுகளின் கதி மக்கள் மத்தியில் இன்னும் கவலையை ஏற்படுத்திதான் வருகிறது.
அணுகுண்டுகள் மட்டும் வெடித்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை மீண்டும் நிகழாமல் தடுக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள், தீவிர மேற்பார்வை, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது.