2023-ல் அதிக கார்களை வாங்கி குவித்த அமெரிக்கர்கள்! இதில் நம்பர் 1 பிராண்ட் எது தெரியுமா?
மோட்டார் வாகனத் துறை 2023-இல் பல மாற்றங்களை சந்தித்தது. முன்னேறி வரும் இந்த துறையில் பல தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்களும் இதனால் கவரப்பட்டு தங்களுக்கென ஒரு சொந்த காரை வாங்க வேண்டும் என்று முனைப்புக் காட்டுகின்றனர்.
அந்த வகையில் மோட்டார் வாகனத் துறைக்கு கடந்த ஆண்டு சிறப்பானதாக அமைந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2023 ஆண்டில் கார் விற்பனை அதிகமாக இருந்துள்ளது. அதாவது 2022ஆம் ஆண்டில் விற்பனையான கார்களை கணக்கிட்டு பார்க்கும்போது, கடந்தாண்டில் 15.5 விழுக்காடு அளவு வணிகம் மேம்பட்டுள்ளது.
வெறும் 12 மாதங்களில் 1.55 கோடி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு உற்பத்தியாளரும் அந்த ஆண்டிற்கான விற்பனைத் தரவை வழங்கும் வரை ஒவ்வொரு உற்பத்தியாளரும் அந்த ஆண்டிற்கான விற்பனைத் தரவை வழங்கும் வரை, 2023ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வாங்கப்பட்ட கார்களின் துல்லியமான எண்ணிக்கை அறிய முடியாது என்றாலும், மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை 2022ஆம் ஆண்டின் சராசரி விற்பனையை விட இன்னும் ஒரு பெரிய படி மேலே உள்ளது.
விற்பனையில் ஜெனரல் மோட்டார்ஸ் (GM) முன்னணியில் இருக்கிறது. 25லட்சத்து 77ஆயிரத்து 662 இலகுரக வாகனங்களை நிறுவனம் விற்றுள்ளது. 2022-ஐ விட இது 14.1 விழுக்காடு அதிகமாகும். செவ்ரோலெட் GM நிறுவனத்தின் கீழ் இயங்கும் மிகவும் பிரபலமான துணை பிராண்டாக இருக்கிறது. இந்த பிராண்ட் மொத்தம் 16 லட்சத்து 99ஆயிரத்து 244 வாகனங்களை விற்றுள்ளன. முறையே மற்றொரு துணை நிறுவனமான GMC பிராண்ட் 5லட்சத்து 63ஆயிரத்து 677 வாகனங்களை விற்றுள்ளது.
செவ்ரோலெட் உடன் நெருங்கிய போட்டியில் இருக்கிறது டொயோட்டா நிறுவனம். டொயோட்டா குழுமம், டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் கார்களை விற்பனை செய்கிறது. ஜப்பானிய நிறுவனமான இது மொத்தம் 22லட்சத்து 48ஆயிரத்து 477 வாகனங்களை விற்றுள்ளது. இது 2022 இன் புள்ளிவிவரங்களை விட 6.6 விழுக்காடு அதிகமாகும். இந்தியாவில் நிறுத்தப்பட்ட ஃபோர்டு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு மொத்தம் 19லட்சத்து 95ஆயிரத்து 912 வாகனங்களை நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. 2022-ஐ விட இது 7.1 விழுக்காடு அதிகமாகும்.
அடுத்ததாக ஹூண்டாய் குழுமத்தின் ஹூண்டாய், கியா, ஜெனிசிஸ் பிராண்டுகள் உள்ளன. இந்த நிறுவனம் 2023-இல் மொத்தம் 16லட்சத்து 52ஆயிரத்து 821 கார்களை அமெரிக்காவில் விற்பனை செய்துள்ளது. ஜீப், ஆல்ஃபா ரோமியோ, ஃபியட், கிறைஸ்லர் போன்ற பிராண்டுகள் இணைந்து மொத்தமாக 15லட்சத்து 33ஆயிரத்து 670 கார்களை விற்பனை செய்துள்ளன. ஹோண்டா நிறுவனம் 13லட்சத்து 8ஆயிரத்து 166 கார்களை விற்றுள்ளது. இது 33 விழுக்காடு வளர்ச்சியாகும். அமெரிக்க கார் சந்தையில் BMW, Mazda, Nissan ஆகியவையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஃவோக்ஸ்வேகன் குழுமத்தின் ஆடி, பென்ட்லி, வோக்ஸ்வாகன், லம்போர்கினி போன்றவையும் 2022-ஐ விட கடந்தாண்டின் சிறப்பாக செயல்பட்டதாக தரவுகள் விளக்குகின்றன.