மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியா ? விட மாட்டோம் – எடப்பாடி பழனிசாமி..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்தியில் பாஜக – தி.மு.க. கூட்டணி 2003-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போதுதான் மின்சார சட்டம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, 2006-11ல் அப்போதைய மைனாரிட்டி திமுக அரசு, தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமாக இருந்த, தமிழ்நாடு மின்சார வாரியத்தை தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), தமிழ் நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO), தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம் (TNEB LIMITED) என மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் திமுக அரசு, TANGEDCO-வை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் லிமிடெட், (TNPGCL), தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் லிமிடெட் (TNPDCL), தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் லிமிடெட் (TNGECL) என மூன்று நிறுவனங்களாக பிரித்ததோடு மட்டுமல்லாமல், இந்த மூன்று நிறுவனங்களும் ஏப்ரல் 1-ஆம் தேதி, வரும் நிதியாண்டு முதல் புதிய கணக்கை தனித் தனியே துவக்கிட அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்த திமுக அரசு பதவியேற்ற 32 மாத காலத்தில், ஏற்கெனவே இரு முறை மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியால் மீண்டும் மின் கட்டண உயர்வு தமிழக மக்களின் மீதுதான் விடியும். பல வருடங்களாக, லட்சக்கணக்கான மின் ஊழியர்களின் உழைப்பால் உருவான தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உட்கட்டமைப்பு மற்றும் அதன் சொத்துக்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் மோசமான நிலை உருவாகும்.
எனவே மறுசீரமைப்பு, செலவுகளை சிக்கனப்படுத்துதல் மற்றும் மனித சக்தியை ஒழுங்குப்படுத்துதல் என்கிற போர்வையில், மின் வாரியத்தை பல கூறுகளாக துண்டாடி, படிப்படியாக மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் எண்ணத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மேலும், மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.