கவனம் ஈர்த்த பேச்சு… எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு : கல்லூரி மாணவரின் கதையில் வந்த ஹிட் படம்
நிகழ்ச்சி ஒன்றில், கல்லூரி மாணவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர், பின்னாளில் தனது படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பினையும் கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல் .
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்று முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முக திறமைக கொண்ட எம்.ஜி.ஆர், ஒருவரின் திறனை அறிந்து அவருக்கு வாய்ப்பு கொடுப்பதில் முக்கிய நபராக திகழ்ந்துள்ளார். இந்த வகையில், கல்லூரி விழாவில் தன்னை விமர்சித்து பேசிய ஒருவருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர் தான் எம்.ஜி.ஆர்.
1968-ம் ஆண்டு எமம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிப்பில் வெளியான படம் புதிய பூமி. சாணக்யா என்பவர் இயக்கிய இந்த படத்தில், நம்பியார், நாகேஷ், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இதில் பூவை செங்குட்டுவன் எழுதிய ”நான் உங்கள் வீட்டு பிள்ளை” என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும் புதிய பூமி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் வி.சி.குகநாதன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது கல்லூரி மாணவராக இருந்த வி.சி.குகநாதன், இந்த நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றியுள்ளார். அவரின் பேச்சு எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்ததால் மறுநாள் தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி மறுநாள் எம்.ஜி.ஆரை சந்தித்த வி.சி.குகநாதனிடம், உங்கள் பேச்சு ரொம்ப சிறப்பாக இருந்தது. நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்க, கதை எழுதுவதில் எனக்கு மிகவும் விருப்பம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட, எம்.ஜி.ஆர், அப்படியா சரி எனக்கு ஒரு கதை எழுதுங்க என்று சொல்லிவிட்டு, அப்போது அங்கு வந்த இயக்குனர் சாணக்யாவிடம், வி.சி.குகநாதனை அறிமுகம் செய்து வைத்து உங்களுடன் படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.