சுவிஸ் பொலிசாருக்கு வந்த அவசர அழைப்பு: பின்னர் ஏற்பட்டுள்ள சந்தேகம்
சுவிஸ் மாகாணமொன்றில் பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்த நிலையில், பின்னர், யாரோ தங்களை ஏமாற்றுகிறார்களோ என்னும் சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பொலிசாருக்கு வந்த அவசர அழைப்பு
கடந்த புதன்கிழமையன்று, ஜெனீவா மாகாண பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. உடனடியாக பொலிசார் அழைப்பு வந்த இடத்துக்கு விரைந்த நிலையில், அது ஒரு போலி அழைப்பு என அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
Swatting
அதாவது, அமெரிக்கா போன்ற நாடுகளில், பொலிசாரை அழைக்கும் ஒரு நபர், இன்னொரு நபருடைய முகவரியைக் கொடுத்து, போலியாக அங்கு ஏதோ பிரச்சினை என்று கூறுவதுண்டாம். இதனால் பொலிசார் அங்கு குவிய, அதனால் சில நேரம் உயிர் பலி கூட ஏற்பட்டதுண்டாம்.
இது Swatting என அழைக்கப்படுகிறது. SWAT என்பது, சில குறிப்பிட்ட அபாய சூழல்களை எதிர்கொள்வதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற பொலிசார் கொண்ட ஒரு குழுவாகும். இந்த SWAT என்ற வார்த்தையிலிருந்துதான் Swatting என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஆக, தாங்கள் இந்த மோசடிக்கு இலக்காகிவிட்டோமோ என ஜெனீவா பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், இப்படி பொலிசாரை மட்டுமல்ல, எந்த அவசர உதவியையும் போலியாக அழைப்பது சட்டப்படி குற்றமாகும் என்கிறார்கள் பொலிசார். மேலும், இத்தகைய குற்றங்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்கிறார் பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர்.