பிரித்தானியாவுக்கு Visitor Visaவில் வருவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவுக்கு Visitor Visaவில் வருவோர், பிரித்தானியாவிலிருந்தபடியே தம் சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட வகை பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எளிமையாகக் கூறினால், Visitor Visaவில் வருவோர், தாங்கள் தங்கள் நாட்டில் விட்டுவந்த அல்லது முடிக்கவேண்டிய சில பணிகளை (Remote work), பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடரலாம்.
சில நிபந்தனைகள்
சுற்றுலாவுக்காக, தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க, மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வருவோர், சில குறிப்பிட்ட பணிகளை பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடரலாம். இந்த சலுகை, 2024, ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது.
அதாவது, அவர்களுடைய முதன்மையான நோக்கம் பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தங்கள் சொந்த நாட்டில் பணியைத் தொடர்வதாக இருக்கக்கூடாது. அவர்களுடைய முதன்மையான நோக்கம், சுற்றுலாவாகவோ, தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதாகவோ, மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதாகவோ இருந்து, அந்த நேரத்தில் தங்கள் சொந்த நாட்டில் முடிக்கவேண்டிய பணியைத் தொடர்வதாக இருந்தால், அதற்கு அனுமதி உண்டு.
இன்னும் தெளிவாகக் கூறினால், மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, தொலைபேசி அழைப்புகளை ஏற்று அவற்றிற்கு பதிலளிப்பது, காணொளிமூலம் கூட்டங்களில் பங்கேற்பது முதலான தொலைக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் செய்யப்படும் பணிகளைச் செய்ய மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் முதலானோர் சுற்றுலா போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வரும்போது, அவர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.