லண்டன் நகரை உலுக்கிய அமில வீச்சு சம்பவத்தில் முக்கிய திருப்பம்… ஒருவர் கைதானதாக தகவல்

லண்டனில் ஆப்கான் அகதி ஒருவர் முன்னெடுத்த அமில வீச்சு தாக்குதல் சம்பவத்தில், குற்றவாளிக்கு உதவியதாக கூறப்படும் நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கான் அகதி அமில வீச்சில்
தெற்கு லண்டனின் Clapham பகுதியில் கடந்த புதன்கிழமை அப்துல் எஸேதி என்ற 35 வயது ஆப்கான் அகதி அமில வீச்சில் ஈடுபட்டதுடன், இதுவரை தலைமறைவாகவே உள்ளார். பொலிசாரும் அந்த நபரை தீவிரமாக தேடியும் வருகின்றனர்.

அமில வீச்சில் ஈடுபட்டதுடன் பெண் ஒருவர் மீது வாகனத்தை செலுத்தவும் முயன்றுள்ளார். குறித்த பெண்ணின் 3 வயது மகளை தாக்கியுள்ளார். அமில வீச்சில் பாதிக்கப்பட்ட அந்த 31 வயது பெண் தனது வலது கண்ணின் பார்வையை இழக்க நேரிடும் என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது இரு மகள்களும் அமில வீச்சில் காயமடைந்திருந்தாலும், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது இந்த வழக்கில் எஸேதிக்கு உதவியதாக கூறப்படும் 22 வயது இளைஞரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

20,000 பவுண்டுகள் சன்மானம்
ஆனால் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. எஸேதி தமக்கு அறிமுகமான ஒருவருடன் பாதுகாப்பாக மறைந்திருக்கிறார் என்றே பொலிசார் நம்புகின்றனர்.

மேலும், எஸேதி தொடர்பில் உரிய தகவல் தெரிவிப்போருக்கு 20,000 பவுண்டுகள் சன்மானம் அளிக்கப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸேதியை அடையாளம் காணும் பொதுமக்கள் கண்டிப்பாக அந்த நபரை நெருங்க வேண்டாம் என்றும், அவர் ஆபத்தானவர் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

எஸேதியை கைது செய்ய போதுமான தகவல் அளிக்கும் ஒருவருக்கு 20,000 பவுண்டுகள் வெகுமதி உறுதி என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *