பிரித்தானியா சென்றதும் கணவனைக் கழற்றிவிட்ட இந்தியப் பெண்
இந்தியப் பெண்ணொருவர், பிரித்தானியாவுக்குச் சென்றதும், தன்னை பிரித்தானியாவுக்கு அனுப்ப பண உதவி செய்த கணவனை கழற்றிவிட்டுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா சென்றதும் கணவனைக் கழற்றிவிட்ட பெண்
இந்தியாவின் பஞ்சாப் பாநிலத்திலுள்ள லூதியானாவைச் சேர்ந்த சரூப் சிங் என்பவர், தன் மகனான சுர்ஜித் சிங்கை பிரித்தானியாவுக்கு அனுப்ப விரும்பியுள்ளார். குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக, IELTS முடித்த ஒரு பெண் இருப்பதையும், பண வசதி இல்லாததால் அந்தக் குடும்பத்தால் அந்தப் பெண்ணை பிரித்தானியாவுக்கு அனுப்பமுடியவில்லை என்பதையும் அறிந்துகொண்ட அவர், குல்விந்தர் கௌர் என்னும் அந்தப் பெண்ணைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளார்.
குல்விந்தரை பிரித்தானியா அனுப்புவது என்றும், அவர் பிரித்தானியா சென்றதும், கணவனை அழைத்துகொள்வது என்றும் இரு குடும்பத்தாரும் பேசி முடிவு செய்ய, குல்விந்தருக்கான விசா செலவுகளை சுர்ஜித் குடும்பத்தார் ஏற்று குல்விந்தரை பிரித்தானியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஆனால், திருமணத்துக்குப் பின் பிரித்தானியா சென்ற குல்விந்தர், சுர்ஜித் குடும்பத்துடனான தொடர்புகளை முறித்துக்கொண்டுள்ளார். தொலைபேசி அழைப்புகளை அவர் ஏற்காததோடு, இந்தியாவிலிருக்கும் அவரது குடும்பத்தினரும் சுர்ஜித் குடும்பத்தினரை சந்திப்பதை தவிர்க்கத் துவங்கியுள்ளார்கள்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுர்ஜித் குடும்பத்தினர் பொலிசில் புகார் செய்துள்ளனர். பொலிசார், குல்விந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி முதலான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, அவர்களைக் கைது செய்யும் முயற்சிகளைத் துவங்கியுள்ளனர்.