கட்டுக்கடங்காத கூட்டம்.. ஆந்திராவில் ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள் – வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் டிவி பிரபலம் விஜே ரக்ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டிலும் நடைபெற்றது.
இந்த நிலையில், தற்போது வேட்டையன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் நடத்தி வருகின்றனர். இதில் பகத் பாசில், ரஜினிகாந்த், ராணா டகுபதி ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆந்திராவில் வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தை காண ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து காரில் கிளம்பிய ரஜினியை ரசிகர்கள் சுற்றிவளைத்தனர். இதையடுத்து காரில் இருந்தபடியே ரசிகர்களை பார்த்து கையசைத்தார் ரஜினி. பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு வந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி ரஜினிகாந்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆந்திராவிலும் ரஜினிக்கு இவ்வளவு மாஸா என வியந்து பார்த்து வருகின்றனர்.