கல்யாணி சாளுக்கிய வம்சத்தை சேர்ந்த பண்டைய விஷ்ணு, சிவன் சிலைகள் கண்டெடுப்பு!
கர்நாடகாவின் ராய்ச்சூர் நகரில் உள்ள சக்தி நகர் அருகே உள்ள கிருஷ்ணா நதியின் ஆற்றுப்படுகையில் இருந்து பழங்கால விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய இரண்டு சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராய்ச்சூர்-தெலுங்கானா எல்லையில் பாலம் கட்டும் போது கண்டெடுக்கப்பட்ட இச்சிலைகள், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனவும், கல்யாணி சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த சிலைகள் எனவும் கருதப்படுகிறது.
கிருஷ்ணரின் தசாவதாரத்தை சித்தரிக்கும் சிலை மற்றும் சிவபெருமானைக் குறிக்கும் லிங்கம் உள்ளிட்ட சிலைகளை கண்டெடுக்கப்பட்டதாக பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சிலைகள் தென்பட்டதும் ஆற்றுப்படுகையில் இருந்து அவற்றை பாதுகாப்பாக மீட்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக உள்ளூர் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விலைமதிப்பற்ற நினைவுச்சின்னங்களை பாதுகாக்கவும், மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளும் பணிகளும் தொல்லியல் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராய்ச்சூரை சேர்ந்த வரலாற்றாசிரியர் பத்மஜா தேசாய் கூறுகையில், “ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட பல்வேறு அரச குடும்பங்களுக்கிடையில் நடந்த போர்களின்போது, கோயில்கள் அழிக்கப்பட்டது. அப்போது இந்த சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம்.” என்றார். ராய்ச்சூரின் வரலாறானது, பகுமணி சுல்தான்கள் மற்றும் அடில் ஷாஹிகளின் ஆட்சியின் போது கோயில்களை அழித்தது உட்பட 163 க்கும் மேற்பட்ட போர்களால் ஆனது என்கிறார் அவர். இந்த போர்கள் அக்கால குடிமக்கள் எதிர்கொண்ட சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
கல்யாணி சாளுக்கியர் பயன்படுத்திய தனித்துவ பொருளான பச்சை கலந்த பாறையில் இச்சிலைகள் உருவாகியுள்ளதால் அவை கல்யாணி சாளுக்கியர் வம்சத்தை சேர்ந்தவைகளாக இருக்கலாம் என பத்மஜா தேசாய் கருதுகிறார். இது, இந்த கண்டுபிடிப்பின் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த சிலைகளின் கண்டுபிடிப்பு உள்ளூர் மக்களிடையே பக்தி உணர்வை தூண்டியுள்ளது. தங்களது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால கலைப்பொருட்களை நேரில் காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், அச்சிலைகளை ஆற்று நீரில் சுத்தப்படுத்தி, சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வழிபாடும் செய்யப்பட்டது.
அதன்பின்னர், தொல்லியல் துறை அதிகாரிகள், சிலைகளை ஆய்சு செய்து அதனை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். நூற்றாண்டுகள் பழமையான இச்சிலைகள் குறித்து தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.