anaemia : தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகளிடம் அதிகரித்துவரும் ரத்த சோகை – அதிர்ச்சி ஆய்வு!
தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகள் மத்தியில், தமிழக பொதுசுகாதாரத்துறையால் மேற்கொள்ளப்பட்ட ரத்தசோகை ஆய்வு முடிவுகள்
தமிழகத்தில்,பொதுசுகாதாரத்துறையால் சமீபத்தில் பள்ளிக்குழந்தைகள் மத்தியில் (10-19 வயது) செய்யப்பட்ட ஆய்வில் 56 சதவீத பெண்கள், 41 சதவீத ஆண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
14 லட்சம் பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வில் 2 சதவீதம், பெண்கள் 1 சதவீதம் ஆண்களுக்கு மோசமான (Severe-Hb-7 கிராம்/100 மில்லிக்கு கீழ்) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் தவிர்த்து ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மோசமான ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட 10 சதவீத மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவைப்பட்டால் ரத்தம் ஏற்றியும், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளும் கொடுக்கப்பட்டும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு ஹீமோகுளோபின் (Hb) அளவு 13 கிராம்/100 மில்லிக்கு கீழும், பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 கிராம்/100 மில்லிக்கு கீழும் இருப்பது ரத்தசோகை என ஆய்வில் வரையறுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் NFHS-5ன் படி தமிழகத்தில் 52.9 சதவீத பெண்களும், 24.6 சதவீத ஆண்களும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய ஆய்வில் சென்னையில் 4 சதவீத பெண்களும், 4 சதவீத ஆண்களும் மோசமான ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுவதுடன், அதிக சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரத்தசோகைக்கான காரணங்கள் வேறு, வேறாக இருந்தாலும், அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இரும்புச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் ரத்தசோகை பொதுவாக அதிகமாக தமிழகத்தில் இருக்கிறது.
எனினும் பதுமைப்புரட்சிக்குப் பின்னர் பயிர்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் என வேதிப்பொருட்கள் மட்டுமே பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக இருப்பதால், அவற்றை மட்டுமே (இயற்கை உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்துவது, இயற்கை உரங்களில் இரும்புச்சத்து,ஜின்க் சத்துக்கள் இருக்கின்றன.
செயற்கை உரங்களில் அவை இல்லை) உரமாக மண்ணில் இடுவதால், பயிர்கள் விளையும் மண்ணில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாக சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளதை ஆய்வாளர் வந்தனா சிவா அவர்கள் பசுமைப்புரட்சி முதலில் அறிமுகப்படுத்த பஞ்சாபிலும், பிற இடங்களிலும், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச்சத்து குறைப்பாடு மக்களிடையே ஏற்பட்டதை தெளிவாக நிறுவியுள்ளார்.
எனவே ரத்தசோகை, குறிப்பாக இரும்புச்சத்து குறைபாட்டு ரத்தசோகைக்கு, செயற்கை உரங்களை பயன்படுத்தும் பசுமைப்புரட்சியும் ஒரு காரணம் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு ரத்தசோகையை போக்க அரிசியில் இரும்புச்சத்து செறிவூட்டலை அறிமுகப்படுத்தியது சரியா?
கருவேப்பிலை, முருங்கை கீரை போன்ற உள்ளூர் இரும்புச்சத்து மிக்க சத்துணவுகளை பயன்படுத்தி பலனை அடையாமல் ஆபத்துகள் மற்றம் பின்விளைவுகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் இரும்புச்சத்தை தமிழக அரசு மக்களுக்கு கொடுக்க நினைப்பது எப்படி சரியல்ல.
தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர், அனைத்து ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட, மோசமான ரத்தசோகையாலும், அறிகுறிகள் அதிகம் உள்ள ரத்தாசோகையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை கொடுப்பதை இலக்காக கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிப்பது சிறந்த பலனை கொடுக்கும் என மற்றொரு முக்கிய ஆய்வாளர்ச ண்முகசுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேசிய ரத்தசோகை தடுப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வியாழனன்றும், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் மத்தியில் மோசமான ரத்தசோகை பாதிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் மிக அதிகமாக 10 சதவீதம் பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் திருப்பூரில் 7 சதவீதம் பேருக்கும், ஈரோட்டில் 6 சதவீதம் பேருக்கும் உள்ளது. ஆண்கள் மத்தியில் மோசமான ரத்தசோகை பாதிப்பு திருப்பூரில் 8 சதவீதம் பேருக்கும், திருவள்ளூரில் 4 சதவீதம் பேக்கும், கோவையில் 3 சதவீதம் பேருக்கும் உள்ளது.
சமீபத்தில் கோயம்புத்தூரில் செய்யப்பட்ட தனியார் ஆய்வில் (ஜீவதன் சண்முகம் மற்றும் குழுவினர்) 10-19 வயது மாணவர்களிடேயே ரத்தசோகை பாதிப்பு, பெண்களிடத்தில் அதிகமாக 93.8 சதவீதம் பேரிடமும், 83.9 சதவீதம் பேரிடமும் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால், அந்த ஆய்வுக் கட்டுரையில், வழக்கமாக பூச்சி மாத்திரை (அல்பென்டசோல்) இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் கொடுப்பது போக, ரத்தசோகைக்கான விரிவான, தெளிவான காரணங்கள் ஆராயப்பட்டு, நடைமுறையில் தற்போது இருக்கும் சிகிச்சை முறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஈயம் ரத்தத்தில் அதிகமாக இருந்தாலும் (Lead Poisoning) (தமிழகத்தில் தண்ணீரை கொண்டு செல்லும் குழாய்கள் ஈயத்தால் ஆனதால் நீரில் ஈயம் அதிகரித்து ரத்தசோகை ஏற்படலாம்) ரத்தசோகை பாதிப்பு வரமுடியும்.
மேலும் பல்வேறு வேதிப்பொருட்களின் (பூச்சிக்கொல்லிகள்) பயன்பாடும் ரத்தசோகையை ஏற்படுத்த முடியும்.
40 சதவீதம் கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பிற்கு ரத்தசோகை காரணமாக இருப்பதால், பெண் குழந்தைகளிடம் ரத்தசோகை நோயை போக்குவது, வருங்காலத்தில் கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்பை குறைக்க உதவும்.
ரத்தசோகையை மாணவர்கள் மத்தியில் கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ளும்போது, ரத்தசோகைக்கான காரணங்களை தெளிவாக கண்டறிந்து, அதற்கான உரிய சிகிச்சையை தனிநபர்களுக்கு அளித்தால் மட்டுமே பலன் கிட்டும்.
அனைவருக்கும் இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் பூச்சி மாத்திரை போன்ற பொதுவான சிகிச்சைகள் கொடுப்பது எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும் என்பது சந்தேகமே.
தமிழக அரசு அறிவியல்ரீதியான ரத்தசோகை தடுப்புமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.