தமிழில் படம் இயக்கும் பிரபல மலையாளப்பட இயக்குநர் அஞ்சலி மேனன்

2008 ல் மலையாளத்தில் வெளியான மஞ்சாடிக்குரு படத்தின் மூலம் இயக்குநரானவர் அஞ்சலி மேனன். 2009 ல் மலையாளத்தில் கேரளா கஃபே ஆந்தாலஜி திரைப்படம் வெளியானது. இதில் ஹேப்பி ஜர்னி என்ற கதையை அஞ்சலி மேனன் இயக்கியிருந்தார்.

அஞ்சலி மேனனின் திரைக்கதைத் திறமைக்கு சான்றாக அமைந்த படம் துல்கர் சல்மான், திலகன் நடித்த உஸ்தாத் ஹோட்டல். அன்வர் ரஷீத் இயக்கிய இந்தப் படத்தின் திரைக்கதையை அஞ்சலி மேனன் எழுதியிருந்தார். படம் விமர்சனரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் இயக்கிய பெங்களூரு டேய்ஸ் திரைப்படம் கேரளாவுக்கு வெளியே அவருக்கு ரசிகர்களை உருவாக்கித் தந்தது. இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், மலையாளத்தின் தரமும், வெற்றியும் தமிழில் அமையவில்லை.

அஞ்சலி மேனன் கூடே என்ற படத்தை 2018 ல் பிருத்விராஜ், பார்வதி, நஸ்ரியா நடிப்பில் இயக்கினார். அதையடுத்து, வொண்டர் வுமன் படத்தை ஆங்கிலத்தில் எழுதி, இயக்கினார். இந்தப் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் 2022 ல் வெளியானது.

மலையாளம், ஆங்கிலத்தில் படம் இயக்கி வந்த அஞ்சலி மேனன் முதல்முறையாக தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். இதனை கர்நாடகாவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான கேஆர்ஜி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. படங்களை விநியோகித்து வந்த இந்நிறுவனம் சமீபத்தில்தான் படத்தயாரிப்பில் இறங்கியது. தற்போது தமிழிலும் படத்தயாரிப்பை தொடங்க உள்ளனர். இது குறித்துப் பேசிய அஞ்சலி மேனன், “கேஆர்ஜி ஸ்டுடியோஸ் உடன் இணைய இருக்கும் இவ்வேளையில் மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் நமது கலாச்சாரத்தை மையமாக வைத்து உலகத்தரத்தில் படங்கள் எடுப்பதிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, கதை நிலப்பரப்புக்களுக்கு அப்பால் பார்வையாளைகளை ஒன்றிணைத்து அவர்கள் மறக்கவே முடியாத, சிந்தனையைத் தூண்டுகிற, அதே சமயம் பொழுதுப்போக்கு நிறைந்த திரைப்பட பயணங்களுக்கு கூட்டிச் செல்ல ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

அஞ்சலி மேனனின் தமிழ்ப் படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *