Annamalai: பல அமைச்சர்கள் சிறைக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்- அண்ணாமலை சூசகம்

தமிழகத்தில் 35 அமைச்சர்களில் 11 பேர் ஊழல் வழக்கில் விசாரணையில் உள்ளனர். பல அமைச்சர்கள் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கின்றனர். தொகுதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திமுக பாராளுமன்ற உறுப்பினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ முன்வருவதில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

“என் மண் என் மக்கள் பயணத்தில், 1008 சிவலிங்கங்கள் கோவில் அமைந்திருக்கும் புண்ணிய பூமியான வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில், திருமூல முனிவரின் சீடரான கஞ்சமலை சித்தர் வாழ்ந்த இளம்பிள்ளை பகுதியில், ஊழலற்ற, குடும்ப ஆட்சி இல்லாத அரசியல் மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, அனைத்துத் தரப்புப் பொதுமக்களும் மிகுந்த எழுச்சியுடன் பங்கேற்றதில் சிறப்புற்றது.

ஒருகாலத்தில் முத்து எடுக்கப்பட்ட திருமணிமுத்தாற்றின் மையப்பகுதி, வீரபாண்டி தொகுதியில் தான் உள்ளது. புகழ்பெற்ற செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்குத்தி, திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்ட முத்தால் ஆனது. ஆனால், இப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய திருமணிமுத்தாறு, இன்று சேலத்தின் கூவம் என அழைக்கும் அளவுக்குப் பாழடைந்து விட்டது. மணப்பாறை முறுக்கைப் போல, வீரபாண்டி ஆட்டையாம்பட்டி கைமுறுக்கு புகழ்பெற்றது. இங்குள்ள இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும், அபூர்வா பட்டு, சாமுத்திரிகா பட்டு, எம்போஸ் பட்டு, ஆல் எம்போஸ் பட்டு போன்றவை தேசிய அளவில் மிகவும் புகழ் பெற்றவை.

நெசவாளர்கள் நலன் காக்க கடந்த 3 ஆண்டுகளில், மத்திய அரசு, தமிழகத்தில் 15 நெசவாளர் நேரடி விற்பனை சந்தை அமைத்துள்ளது. இந்தியாவில் அதிக நெசவாளர்கள் பயன்பெற்ற மாநிலம் தமிழகம். தமிழகத்தில் 1,07,335 பேர் பயன்பெற்றுள்ளனர். சூரியசக்தி மின்சாரம் மூலமாக விசைத்தறிகளை இயக்க, அதிகபட்சம் 8 விசைத்தறிகள் வைத்திருப்போருக்கு மானியம் வழங்குகிறது நமது மத்திய அரசு. இந்தத் திட்டத்தின் மூலம், 2.8 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை நெசவாளர்களுக்கு மத்திய அரசு மானியம் கிடைக்கும். பட்டியல் சமுதாய சகோதரிகள் விசைத்தறி அமைக்க Standup இந்தியா திட்டத்தின் கீழ் 25 லட்ச ரூபாய் வரை நமது மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. ஆனால், இதை இங்குள்ள திமுக அரசு மக்களிடம் சென்று சேர்ப்பதில்லை. 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தில் பயன்பெற தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை. திமுக அரசுக்கு பட்டியல் சமூக சகோதரிகள் மீது உள்ள அக்கறை இதுதான். மத்திய அரசு வழங்கும் திட்டங்களைத் தடுக்கவே திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு, தன் மகனுக்கு தேர்தலில் வாய்ப்பு கேட்ட வீரபாண்டி ஆறுமுகத்திடம் வாரிசு அரசியலை தவிர்க்க வேண்டும் என்று பதில் அளித்த கருணாநிதி, இந்த முறை ஸ்டாலினுக்கு சீட் இல்லையா என்று வீரபாண்டி ஆறுமுகம் கேட்டதும் மறுபேச்சு பேசாமல் வீரபாண்டி ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட இடம் வழங்கினார். குடும்ப அரசியல், வாரிசு அரசியல் பற்றி பேச திமுகவில் யாருக்கும் தகுதி இல்லை. 70 ஆண்டு காலமாக குடும்ப அரசியல் நடத்தி, உண்மையான ஜனநாயகம் வரவிடாமல், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தடுப்பதே திராவிட மாடல். கடந்த 14 தேர்தல்களில், 10 முறை ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஒரு குடும்பத்தின் பிடியில் வீரபாண்டி தொகுதி எந்த முன்னேற்றமும் இல்லாமல், நெசவுத் தொழிலும் நசிந்து, பல ஆண்டுகளாகச் சிக்கித் தவித்து வருகிறது.

மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், தமிழக அரசின் வரிப் பங்கீடை இன்று தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ. 6,23,713 கோடி ரூபாய். மத்திய அரசு தமிழகத்துக்குக் கொடுத்த நிதி ரூ. 6,96,666 கோடி ரூபாய். தமிழக வரி பங்களிப்பை விட அதிகமாக மத்திய அரசு திரும்பக் கொடுத்துள்ளது. அதே போல, நூறு ரூபாய் ஜிஎஸ்டி வரியில், 50 ரூபாய் மாநில அரசின் நேரடி பங்காகவும், 21 ரூபாய் நிதி ஆணையத்தின் வழியாகவும், மொத்தம் 71 ரூபாய் மாநில அரசுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 29 ரூபாய்தான் மத்திய அரசுக்குச் செல்கிறது. அதன் மூலம் மத்திய அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அந்த வரியில் மத்திய அரசு செயல்படுத்திய நலத்திட்டங்கள், சேலம் மாவட்டத்தில் மட்டும் 63,828 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு ரூ. 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,20,539 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் நிதி என இதுவரை 30,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 6,682 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், 100 ரூபாயில் 71 ரூபாய் பெற்ற திமுக அரசு மக்களுக்காக செய்த நலத்திட்டங்கள் என்ன? 35 அமைச்சர்களில் 11 பேர் ஊழல் வழக்கில் விசாரணையில் உள்ளனர். பல அமைச்சர்கள் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கின்றனர். தொகுதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திமுக பாராளுமன்ற உறுப்பினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ முன்வருவதில்லை. மக்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில்லை. ஊழல் செய்து கொள்ளையடிப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் இருக்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஒவ்வொருவரும் சிறைக்குச் செல்வார்கள்.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் ஊழல் குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *