பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை அறிவித்த நிறுவனம்.. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் மல்டிபேக்கர் பங்கு
குரோயிங்டன் வென்ச்சர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் மசாலா பொருட்களை வர்த்தகம் செய்து விநியோகம் செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம் கிவி, டிராகன் பழம், அவகேடோ மற்றும் பல விளைபொருட்களை இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.19.63 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2021-22ம் நிதியாண்டைக் காட்டிலும் 1,496 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-23ம் நிதியாண்டில் குரோயிங்டன் வென்ச்சர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.1.26 கோடி ஈட்டியுள்ளது. இருப்பினும் முந்தைய 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.
இந்நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களை ஏமாற்றவில்லை. கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 7.43 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேவேளையில் கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 247 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 1,901 சதவீதம் அதிகரித்துள்ளது.
3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 536 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தவிர, இப்பங்கின் ஈக்விட்டி மீதான வருவாய் 10.8 சதவீதமாகவும், மூலதனத்தின் மீதான வருமானம் 16.1 சதவீதமாக உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குரோயிங்டன் வென்ச்சர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் அண்மையில் தனது பங்குகளை பிரிக்க 1:10 என்ற விகிதத்தில் பிரிக்க உள்ளதாக தெரிவித்து இருந்தது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட 1 ஈக்விட்டி பங்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட 10 ஈக்விட்டி பங்குகளாக பிரிக்கப்படும்.