இந்திய அணியில் மீண்டும் விரிசல்.. கோலி, ரோகித்துக்கும் ஈகோ போரா? பாதியில் வெளியேறியதன் பின்னணி என்ன?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணிக்குள் மீண்டும் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் இரண்டு ஸ்டார் வீரர்கள் என்றால் அது விராட் கோலி ரோகித் சர்மாவும் தான்.
இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் இருவரின் பங்கும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. தற்போது அணியில் மிக முக்கிய சீனியர் வீரர்களாக இருவரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் இருவருக்கும் கேப்டன்சி தொடர்பாக அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டு வருவதுண்டு.
விராட் கோலி கேப்டனாக இருந்த போது அந்த இடத்திற்கு அவரை விட ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என்று கூறப்பட்டது. அதற்கு காரணம் ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா பலமுறை வென்று இருப்பதால் கேப்டன்சி திறன் ரோகித்துக்கு தான் அதிகமாக இருக்கிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இதன் காரணமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை அதிரடியாக பிசிசிஐ நீக்கியது. இதனால் கடுப்பான விராட் கோலி கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்கா தொடரில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.
அதன் பிறகு ரோகித் சர்மா தான் மூன்று பிரிவுகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எனினும் களத்தில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் நல்ல நண்பர்கள் போல் காட்டிக்கொண்டனர். ரோகித் சர்மாவுக்கு விராட் கோலி தன்னால் முடிந்த அறிவுரைகளையும் வழங்கி வந்தார். இந்த நிலையில் டெஸ்டில் மீண்டும் விராட் கோலி கேப்டன் ஆக வேண்டும் என்று குரல் எழுந்தது.