இதுக்கும் ஹிந்து விரோத திமுக அரசு..கிறிஸ்தவ தேவாலய சர்ச்சையில் அண்ணாமலை மீது வழக்கு- பாஜக பாய்ச்சல்
சென்னை: தர்மபுரி அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் மேரி மாதா சிலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவிக்கும் விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது.
இது தொடர்பாக அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை தர்மபுரியில் நடைபெற்றது. அப்போது பாப்பிரெட்டிபட்டி செயின்ட் லோர்டெஸ் தேவாலயத்துக்கு சென்றார் அண்ணாமலை. அங்கு மேரி மாதா சிலைக்கு அவர் மாலை அணிவிக்க முயன்றார். ஆனால் மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் தடுக்கவில்லை என்பது உள்ளிட்ட வாதங்களை முன்வைத்து சிலர் அண்ணாமலையை தடுக்க முயற்சித்தனர். மேலும் அண்ணாமலைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டது.
அந்த வீடியோவில் 10,000 பேருடன் தர்ணாவில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள்? என்ன எப்படி தடுப்பீர்கள்? என்பது போல அண்ணாமலை கேள்வி கேட்பதான காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அண்ணாமலை மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் தர்மபுரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.