அனுஷ்கா-விராட் கோலி தம்பதிக்கு ஆண் குழந்தை.. பெயரை அறிவித்த பெற்றோர்!!
இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
விராட் கோலி – அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் முடித்தனர். இந்த தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே, 2 ஆவது முறையாக அனுஷ்கா சர்மா கர்ப்பம் அடைந்திருந்தார். இதுபற்றிய தகவல்கள் அதிகம் வெளிவராத நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருந்து வந்தார் விராட் கோலி.
இதற்கு தனிப்பட்ட விஷயங்கள் காரணங்களாக கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன்னதாக, பிரபல கிரிக்கெட் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் விராட் கோலி – அனுஷ்கா சர்மா தங்களது 2 ஆவது குழந்தையை வரவேற்க தயாராகி வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், தங்களுக்கு 2 ஆவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாக விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது- பிப்ரவரி 15 ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அளவற்ற மகிழ்ச்சியுடனும், நெஞ்சம் நிறைந்த அன்புடனும் இதனை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மகனுக்கு அகாய் (Akaay) என்று பெயர் வைத்துள்ளோம். எங்கள் மகள் வாமிகாவின் தம்பி இந்த உலகுக்கு வந்து விட்டார்!
— Virat Kohli (@imVkohli) February 20, 2024
எங்கள் வாழ்க்கையின் இந்த அழகான தருணத்தில் உங்களது வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறோம். இந்த நேரத்தில் எங்களது தனியுரிமைக்கு மதிப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.