நெருங்கும் பொங்கல்… போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் – எப்படி சமாளிக்கப் போகிறது அரசு?!
பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
தொழிலாளர்களுடனான அரசின் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று (ஜன. 8) நடந்த இறுதிகட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால் நாளை திட்டமிட்டபடி (ஜன. 9) போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள். இதனால் பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல காத்திருக்கும் பொதுமக்களும் கலக்கமடைந்திருக்கின்றனர்.
அரசு போக்குவரத்து கழகம்
நிறைவேற்றப்படாத கோரிக்கைகளும் திடீர் போராட்ட அறிவிப்பும்:
`தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், போக்குவரத்துத்துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஐ.என்.டி.யு.சி, பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டனர்.
தொடர் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை முயற்சிகள்:
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு அரசு, போராட்டத்தை வாபஸ் பெற வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. குறிப்பாக போக்குவரத்துத்துறை, தொழிலாளர் நலத்துறை ஆணையம் மூலமாக பேச்சுவார்த்தையில் இறங்கியது. தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்திலுள்ள தொழிலாளர் நலத்துறை ஆணைய அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற அரசின் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்ததாக ஜனவரி 3-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.