மாணவர்களே ரெடியா ? இன்று +2 செய்முறை தோ்வுகள் தொடக்கம்..!
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் பொதுத்தோ்வு எழுதவுள்ள பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 6 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வில் பங்கேற்கவுள்ளனர். இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் செய்முறைத் தோ்வுக்கு தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி தோ்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி வரும் 17-ம் தேதிக்குள் செய்முறைத் தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
தோ்வுத்துறை சலுகை அறிவித்த மாணவா்களுக்கு மட்டும் செய்முறைத் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும்.
எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தோ்வுத் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.