முருங்கை கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? ஆச்சரியமளிக்கும் தகவல்கள்
‘முருங்கை நட்டவன் வெறுங்கையுடன் செல்வான்’ என்பது நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் முருங்கை மரத்தை வீட்டில் நட்டு வைத்து, அதன் கீரை, பூ, காய் என்று சகலத்தையும் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வரும் நபர்களுக்கு நோய், நொடி எதுவும் அண்டாதாம்.
ஆக, ஆரோக்கியமாக வாழுகின்ற நபர் எந்தச் சூழ்நிலையிலும் மருத்துவரைப் பார்க்க வேண்டியதில்லை. கை நிறைய மருந்து, மாத்திரைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டியதில்லை என்று அர்த்தம்.
முருங்கையில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி போன்றவை உள்ளன. இது நம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். எலும்புகளை பலப்படுத்தும். கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
குறிப்பாக உடல் எடையை குறைக்க தீவிரமான உடற்பயிற்சி, அது, இது என்று என்னவெல்லாமோ முயற்சித்து பார்த்த மக்களுக்கு, அதன் மூலம் பலன் கிடைக்கவில்லை என்றால் கட்டாயமாக முருங்கை கீரை சாப்பிடலாம். ரத்த சர்க்கர கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு என முருங்கை மூலமாக கிடைக்கின்ற பலன்கள் ஏராளம்.
முருங்கை கீரை பிரட்டல், கீரை சூப், முருங்கை பூ சேர்த்த பால், முருங்கை இளம்பிஞ்சு சேர்த்த பருப்பு, நெய் கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், கூட்டு, புளிக்குழம்பு என்று பல வகைகளில் நம் உணவில் முருங்கையை சேர்த்துக் கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் முருங்கை பிசினும் கூட பயன்படுத்தப்படுகிறது. முருங்கையின் பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
பசியை கட்டுப்படுத்தும் : உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் நம் பசி கட்டுக்குள் இருக்க வேண்டும். அதற்கு முருங்கை கீரை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது மற்றும் நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் முருங்கை சாப்பிட்டால் இன்சுலின் அளவுகள் அதிகரிக்கும். அதனால் ரத்த சர்க்கரை குறையும்.
நார்ச்சத்து : உணவுப் பொருள் மூலமாக கிடைக்கக் கூடிய நார்ச்சத்து நம் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும். அந்த வகையில், முருங்கையில் உள்ள நார்ச்சத்து, நமக்கான கலோரி தேவையை குறைக்கும்.
அழற்சிக்கு எதிரான பண்புகள் : உடலில் பல பிரச்னைகளுக்கு அழற்சிதான் காரணமாக அமைகிறது. அதனை போக்க கூடியது முருங்கை ஆகும். முருங்கையை சாப்பிட்டால், அடுத்த வேளை உணவுக்கு இடையே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டிய வேட்கை ஏற்படாது. இதனால் உடல் பருமனை தடுக்கலாம்.
மெடபாலிச நடவடிக்கை : உணவை ஆற்றலாக மாற்றும் பொருட்டு நம் செல்களில் நடைபெறக் கூடிய வினைதான் மெட்டபாலிசம் ஆகும். எந்த அளவுக்கு மெட்டபாலிசம் கூடுதலாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமக்கான ஆற்றல் கிடைக்கும். ஆக, மெட்டபாலிசம் அதிகரித்தால் உடல் எடை குறைப்பு சாத்தியமாகும்.