நீங்க துணை முதலமைச்சராக போறீங்களா? – உதயநிதி சொன்ன ‘நச்’ பதில்!
நீங்கள் தான் துணை முதலமைச்சரா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயநிதி கொடுத்த மாஸ் பதில் அனைவரையும் வாயடைக்க செய்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி பணியாளர்கள், குடிநீர் வாரிய பணியாளர், மின்துறை ஊழியர்கள், urbasser என்ற தனியார் கழிவு மேலாண்மை நிறுவன ஊழியர்கள் 1,700 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டத்திற்கு பயணம் செய்தாலும் சேப்பாக்கம் தொகுதிக்கு வரும்போது சொந்த வீட்டுக்கு வருவது போன்ற உணர்வு. என் குடும்பத்தினரை பார்க்க வந்துள்ளேன். மிக்ஜாம் புயல் தாக்கத்தின் போது சிறப்பாக பணியாற்றிய முன் களப்பணியாளர்களுக்கு நன்றிகளும், வணக்கங்களும்.
2015 ஆம் ஆண்டில் இது போன்று பெரு வெள்ளம் வந்தது, அப்போது சகஜ நிலை திரும்ப 10 நாட்கள் ஆனது, இந்த முறை 3 நாட்களில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப முன் களப்பணியாளர்கள் தான் காரணம். நாங்கள் அனைவரும் உங்கள் பணிக்கு தலை வணங்குகிறோம். எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது. சென்னை சென்னையாக இருக்க நீங்கள் தான் காரணம். உங்களை சென்னையின் அன்னை என்றே சொல்லலாம்.
வெளியில் விளையாடி அசுத்தமடைந்து வரும் குழந்தையை தாய் அரவணைத்து சுத்தம் செய்வது போல் நீங்கள் சென்னையை சுத்தம் செய்கிறீர்கள். பெயரளவில் மட்டுமல்ல மனதளவிலும் நீங்கள் தூய்மைப் பணியாளர்கள் தான். கடிகாரத்திற்கு கூட ஓய்வு இருக்கும் உங்களுக்கு இல்லை.எல்லோருக்கும் முன் பணியை தொடங்கி எல்லோருக்கும் பின் முடிப்பவர்கள். சில மணி நேரம் நீங்கள் பணி செய்யவில்லை என்றால் சென்னை முடங்கி விடும் என கூறி வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து துணை முதலமைச்சர் பதவி உங்களுக்கு அளிக்கப்பட இருக்கிறதா, என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம் என பதிலளித்தார்.
மேலும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான இந்தியா கூட்டணி நடத்தும் பேரணியில் திமுகவின் மாணவர் அணியினர் கலந்து கொள்கிறார்கள் என்றார். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.