புதுசா கார் வாங்க போறீங்களா?.. அவசரப்படாதீங்க.. இந்த மாசம் நிறைய கார் அறிமுகமாக காத்திருக்கு! இதோ ஃபுல் லிஸ்ட்
இந்தியாவில் கடந்த மாதங்களைப் போலவே நடப்பு 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திலும் நிறைய புதுமுக வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதுமட்டுமில்ல, குறிப்பிட்ட சில புதுமுக வாகனங்களை உற்பத்தியாளர்கள் வெளியீடு செய்யவும் இருப்பதாக கூறப்படுகின்றது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV300): மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்யூவி300 இருக்கின்றது. அதிக பாதுகாப்பு வசதிக்கும், திறனுக்கும் பெயர்போன கார் மாடலாகவும் அது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது மஹிந்திரா நிறுவனம்.
இதன் வருகையே இந்தியாவில் இந்த மாதத்தில் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் சமீபத்திலேயே அதன் புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்யூவி40 கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலாகும். எக்ஸ்யூவி300 தழுவி உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடலே எக்ஸ்யூவி400 ஆகும். இதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை நிறுவனத்தின் பிரபல கான்செப்ட் மாடலான பிஇ எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை தழுவி புதுப்பித்திருக்கின்றனர்.
ஆகையால், முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் புதிய வெர்ஷன் சற்று அதிக கவர்ச்சியானதாக மாறி இருக்கின்றது. இந்த காரை போலவே விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்யூவி300-ம் அதிக கவர்ச்சியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரில் புதிய இரண்டு பிரிவுகள் கொண்ட கிரில், பெரிய ஏர் இன்டேக், புதிய முன் பக்க பம்பர் மற்றும் ஹெட்லேம்ப் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுதவிர, இதன் பகல் நேர லைட் அமைப்பிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி புதிய அலாய் வீல்கள், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சன்ரூஃப் மற்றும் பெரிய 10.25 அங்கு இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவையும் ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்யூவி300 காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன், பனோரமிக் சன்ரூஃப் வசதியும் புதிய எக்ஸ்யூவி300இல் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது. எனவேதான் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் பலமடங்கு பெருகிக் காணப்படுகின்றது.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (New Generation Maruti Swift): இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலே ஸ்விஃப்ட். மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலாகவும் ஸ்விஃப்ட் விளங்குகின்றது. இதன் புதிய தலைமுறை வெர்ஷனை வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது, மாருதி சுஸுகி.
ஆகையால், விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு இந்த காரை இந்த மாதத்திற்குள்ளாக மாருதி சுஸுகி வெளியீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதத்தின் இறுதி அல்லது அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் இது அறிமுகம் செய்யப்படுவது உறுதி என்றே இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் உற்பத்தி பணிகளை இந்த மாதத்தில் தொடங்க மாருதி சுஸுகி திட்டமிட்டு இருப்பாதகக் கூறப்படுகின்றது. இதனால்தான் இந்த மாதம் அக்கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃப்ளோட்டிங் வகை தொடுதிரை, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்விட்ச் கியர்கள் மற்றும் எச்விஏசி கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதுதவிர, மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட்டைக் காட்டிலும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மிக அதிகமான மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரையில் மைலேஜ் தரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், துள்ளியமான மைலேஜ் விபரம் வெளியிடப்படவில்லை.
டாடா டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி (Tata Tiago and Tigor CNG AMT): டாடா மோட்டார்ஸ் இந்த இரண்டு கார்களுக்கான புக்கிங்களை ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டது. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் இரண்டிற்கும் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. சிஎன்ஜி காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால்தான் இந்த கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.
டாடா மோட்டார்ஸ் டியாகோவின் எக்ஸ்டிஏ சிஎன்ஜி, எக்ஸ்இசட்ஏ பிளஸ் சிஎன்ஜி மற்றும் எக்ஸ்இசட்ஏ என்ஆர்ஜி ஆகிய ட்ரிம்களிலேயே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை வழங்க இருக்கின்றது. இதேபோல், டியாகோவின் எக்ஸ்இசட்ஏ சிஎன்ஜி, எக்ஸ்இசட்ஏ பிளஸ் சிஎன்ஜி ஆகியவற்றில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஸ்கோடா ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட் (Skoda Octavia facelift): பிரீமியம் தர கார் விரும்பிகளின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஸ்கோடா ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட் இருக்கின்றது. இந்த கார் மாடல் இந்த மாதமே அறிமுகமாக இருக்கின்றது. உலக அளவில் அக்காரை இந்த மாதத்தில் வெளியீடு செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. ஆனால், இதன் இந்திய வருகை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், விரைவில் இதுபற்றிய விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிளக்-இன் ஹைபிரிட் அம்சத்தையும் ஸ்கோடா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட டீசர் படங்களால் இந்த காரில் என்ன மாதிரியான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
புதிய ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், புதுப்பிக்கப்பட்ட கிரில், மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் வேற லெவல் பின் பக்கம் உள்ளிட்ட மாற்றங்களுடனேயே இந்த கார் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, புதிய 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த காரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த காருக்கும் இந்தியாவில் எதிர்பார்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.