IMPS-இல் பணம் அனுப்ப போறீங்களா? புதிய விதி அமலாகப் போகுது தெரியுமா!
இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்புகளின் வளர்ச்சி பணப் பரிமாற்றங்களை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்புவது மிகவும் சுலபமாகிவிட்டது.
வங்கிக்கு சென்று சலானை பூர்த்தி செய்து வரிசையில் காத்திருக்க வேண்டிய காலமெல்லாம் மலையேறி ரொம்ப நாளாச்சு. யுபிஐ, மொபைல் பேங்கிங் அல்லது இணையதளம் வாயிலாக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ஜிபே போன்ற யுபிஐ பரிமாற்ற முறையில் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் பணப் பரிமாற்றம் செய்ய நமக்கு உதவுவது IMPS, NEFT, RGTS போன்றவை.
இதில் IMPS எனப்படும் உடனடி பரிமாற்ற சேவையில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் அடிக்கடி IMPS முறையில் பணம் அனுப்புபவர் என்றால் இது உங்களுக்கான செய்தி தான். IMPS என்றால் என்ன? IMPS என்பது ஒரு நிகழ்நேர கட்டண முறை. இதன் மூலம் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இது நேஷனல் பேமண்ட்ஸ் ஆஃப் இந்தியா வழங்கும் ஒரு சிறப்பு வசதி. இரவு, பகல் என வங்கி செயல்பாட்டு நேரங்களை கணக்கில் கொள்ள வேண்டிய தேவையில்லை. நினைத்த நேரத்தில் நினைத்த பணத்தை அனுப்பலாம்.
ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை அனுப்ப பெரும்பாலானவர்கள் இந்த முறையை பயன்படுத்துகின்றனர். பிப்.1 முதல் IMPSக்கு புதிய விதி: வழக்கமாக IMPS முறையில் பணம் அனுப்ப வேண்டுமெனில், நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்களின் வங்கி கணக்கு எண், வங்கி பெயர் மற்றும் IFSC குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து பயனாளியாக(beneficiary) சேர்த்திருக்க வேண்டும். பயனாளியானது உறுதி செய்யப்பட்ட பின்னரே பணம் அனுப்ப முடியும். சில வங்கிகளில் இப்படி பயனாளியை சேர்க்க 24 மணி நேரம் ஆகும்.
ஆனால் பிப்ரவரி 1ஆம் தேதி ஒருவரது வங்கி கணக்கை பயனாளியாக சேர்க்காமலேயே ரூ.5 லட்சம் வரை IMPS முறையில் அனுப்ப முடியும். தி நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஒரு கிளிக்கில் ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம்: பிப்ரவரி 1ஆம் தேதி முதல் IMPSஇல் பணம் அனுப்புவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.