கடன் வாங்கி காஸ்ட்லி கார் வாங்க போறீங்களா? இத முதல்ல படிங்க!
சொகுசா, ஆடம்பரமா இருக்கும் கார் வாங்கி ஊரெல்லாம் சுற்றி வரணும் என்கிற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. நவீன தொழில்நுட்பம், ஸ்டைலான லுக் இப்படிப்பட்ட நம்ம கனவு காரை எப்படி வாங்குவது? இதற்காக லோன் எடுக்கலாமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடன் வாங்கி ஆடம்பர கார் வாங்குவது என முடிவு செய்துவிட்டால் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கார் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ஒப்பீடு செய்யுங்கள். வழக்கமான கார் கடன்களை விட ஆடம்பர கார்களுக்கு கடன்களும், வட்டி விகிதங்களும் மாறுபடும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர், கடன் தொகை மற்றும் கடன் வழங்குநர் ஆகியவற்றை பொறுத்து வட்டி விகிதங்கள் 6.9% முதல் 9.5% வரை இருக்கும். சில வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உயர்தர வாகனங்களுக்கு குறிப்பாக 40 லட்சம் ரூபாய்க்கு மேல் பெறப்படும் கடன்களுக்கு சிறப்பு வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
பட்ஜெட்டுக்கு பிரச்னை வரக் கூடாது: கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னர் அதில் உள்ள செயலாக்க கட்டணம் மற்றும் முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் போன்ற காரணிகளை கருத்தில் கொள்வது மிகச் சிறந்தது.
உங்கள் மாதாந்திர தவணைத் தொகை உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். ஆடம்பரமான கார் வாங்குவது மகிழ்ச்சியை அளித்தாலும் அதற்காக நீங்கள் செலுத்தக்கூடிய மாதத் தவணைத் தொகை உங்கள் பட்ஜெட்டை தீர்த்து விடுவதாக இருந்து விடக்கூடாது. உங்கள் மாத வருமானத்தில் 30 சதவீதத்தை விட அதிகமாக உங்களின் மொத்த ஈஎம்ஐ இருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நிபுணரின் ஆலோசனை அவசியம்: கார் வாங்கும் போது குறிப்பாக சொகுசு கார்கள் அல்லது ஆடம்பரமான கார்களை வாங்கும் போது நமக்கு கடைசி நிமிடம் வரை பல்வேறு கேள்விகளும் பல்வேறு சந்தேகங்களும் இருக்கும்.
இந்த நேரத்தில் ஒரு நிபுணரின் ஆலோசனையை பெறுவது உங்களது சந்தேகங்களை தீர்க்க உதவும். சரியான முறையில் ஒப்பீடுகளை மேற்கொண்டு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இது உதவியாக இருக்கும். எந்த ஒரு வாகனத்தை வாங்குவதற்கு முன்பும் அது குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
ஏனெனில் நீங்கள் பெரிய அளவிலான தொகை கொடுத்து அந்த வாகனத்தை வாங்குகிறீர்கள் எனவே அதன் மதிப்பிழப்பு சொத்து என்ன? மறு விற்பனை விலை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சிறந்த சலுகைகளை பெற முயற்சி செய்யுங்கள்: பொதுவாக விளம்பரங்களையோ அல்லது துண்டு பிரசுரங்களையும் பார்த்துவிட்டு கார் வாங்கும் முடிவை எடுக்கக் கூடாது. அதேபோல நீங்கள் முதன்முறையாக சென்று விசாரிக்க கூடிய ஷோரூம்களில் கிடைக்கும் சலுகைகளை நம்பியும் ஏமாந்து விடக்கூடாது. இரண்டு மூன்று இடங்களில் விசாரித்து விட்டு சலுகைகளை ஒப்பீடு செய்து பின்னர் முடிவெடுங்கள்.
கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை ஒப்பிட்டு பார்க்க பல்வேறு இணையதளங்கள் தற்போது உள்ளன அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
லீஸ்: ஆடம்பர கார்கள் குத்தகைக்கு எடுத்து சில காலம் பயன்படுத்தி பார்க்கலாம் என்ற யோசனையையும் நிபுணர்கள் வழங்குகின்றனர். இதனால் நீண்ட காலம் கடன் கட்ட வேண்டிய தேவை இருக்காது.