மே மாதம் திருமலைக்கு போறீங்களா ? டிக்கெட் முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெருமாளை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களின் நலன் கருதி முன்கூட்டியே ஆன்லைன் தரிசன டிக்கெட், VIP தரிசன டிக்கெட், இலவச தரிசன டிக்கெட் போன்றவற்றை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் இப்போது மே மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் எப்போது பதிவு செய்யலாம் என்பது குறித்து தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 23ம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் மே மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் வரும் 23-ம் தேதி மதியம் 3 மணிக்கு தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் தரிசிக்க விரும்புவோர் 23-ம் தேதி காலை 11 மணிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதே நாள் மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தொடங்க உள்ளது.
எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் குலுக்கல் முறையில் வழங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்துகொள்ளலாம். திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற சேவைகளுக்கு 22-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு இலவசமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.