திருப்பதி போறீங்களா ? அப்போ இதை படிச்சிட்டு போங்க..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். விடுமுறை நாட்களிலும் விசேஷ நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் ரொம்பவே அதிமாக இருக்கும். நாட்டில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத அளவுக்கு ஏழுமலையான் கோவிலுக்கு எந்நாளும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
நம்பர் ஒன் பணக்கார கோவிலாகவும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. திருப்பதியில் மாதம்தோறும் பல்வேறு சிறப்பு விசேஷங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகிறது. விசேஷ நாட்களில் திருப்பதியில் கால் வைக்க முடியாத அளவுக்கு பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக வருடாந்திர பிரம்மோற்சவம், ரத சப்தமி என பல்வேறு விசேஷங்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 06, 20ஆம் தேதி சர்வ ஏகாதசி, மார்ச் 08ஆம் தேதி மகா சிவராத்திரியும், மார்ச் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வருடாந்திர தெப்போற்சவமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி, ஸ்ரீ லட்சுமி ஜெயந்தி ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும்ப திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாவான தெப்ப உற்சவம் 23 ஆம் தேதி தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாளில் ராமர், சீதை, லட்சுமணர் தெப்பத்தில் வலம் வருவார்கள்.
இரண்டாம் நாளில் ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மணி தேவியும், மீதமுள்ள 3 நாட்களும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமியும் காட்சியளிப்பார்கள். வழக்கமாக தெப்ப உற்சவ நாளில் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள். இந்த ஆண்டும் அதேபோல் பக்தர்கள் திருமலையில் நடைபெறும் தெப்போற்சவத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் 57338 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர். 19852 பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றனர். நேற்று இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் 16 பெட்டிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
நேற்று முன்தினம் 4.67 கோடி ரூபாய் உண்டியல் வருமானமாக இருந்தது. நேற்று சுமார் 10 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். நேற்று 59646 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 21938 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று உண்டியல் வருமானம் 3.86 கோடி ரூபாயாக இருந்தது.